சென்னை: தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளின்படி பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கடந்த இரு நாட்களாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று சென்னை பெரம்பூரில் உள்ள முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சட்டமன்ற தேர்தலின் போது தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் உள்ளிட்டவைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
தற்போது தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளின்படி பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள முதல்வர் விஜய் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு தூய்மை பணியாளர்கள் திட்டமிட்டனர். உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட திட்டமிட்ட நிலையில், விஜய் அலுவல பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.