போராட்டத்தை ஒத்திவைப்பதாக தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு! அக். 3ல் நல்ல செய்தி என அமைச்சர்கள் உறுதி

  • சென்னை: அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, "அக்டோபர் 3 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளார்கள். அதுவரை போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது" என அறிவித்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய்யிடம் நேரடியாக வழங்குதற்கு நேரம் ஒதுக்கக் கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    கடந்த 16 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

    முன்பு எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதலமைச்சர் விஜய் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Advertisement

    தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் கூறினார். தொடர்ந்து, உழைப்பவர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த பாரதி உள்ளிட்டோருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அமைச்சர்களுடன் நடைபெற்ற சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உழைப்பவர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு. பாரதி தெரிவித்துள்ளார்.

    அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அக்டோபர் 3 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளார்கள். அதுவரை போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. இன்று 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை எதிர்நோக்கியுள்ளோம்.

    Advertisement

    மழைக்காலம் முடிவதற்குள் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் ரெயின் கோட், அனைத்து வார்டுகளிலும் கழிப்பிட வசதி, அடுத்த மாதம் முதல் உணவுப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கத்தினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    After holding talks with the ministers, sanitation workers met the press and announced, "The ministers have assured us that good news will arrive on October 3rd. The protest is being postponed until then."