சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்! பேச்சுவார்த்தைக்கு போன லயோலா மணியிடம் சரமாரி கேள்வி

  • சென்னை: சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த லயோலா மணியை சுற்றி வளைத்து தூய்மைப் பணியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். முதல்வர் விஜய்யை வர சொல்லுங்க.. எங்களுக்கு நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாக இருக்குது இது.. வீட்டில் குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து இங்கு போராடிக்கொண்டு இருக்கிறோம் என்றனர்.

    Advertisement

    பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

    Advertisement

    தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.

    தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் அரசுக்கு எதிராக கொந்தளித்து பேசினர். அடக்குமுறை அரசுக்கு கண்டனம் என தெரிவித்து தொடர்ந்து 100 நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். முதல்வர் விஜய் நேரில் வந்து பேசனும் என்று சொல்லி போராட்டம் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    மேலும் விஜய் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூரில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களுக்கு போராடுவதற்கான இடம், வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். உங்களில் ஒருவனாக உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக தான் நான் இங்கு வந்து இருக்கிறேன் என்று பேசினார்.

    அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, "முதல்வர் விஜய் இங்கு வர வேண்டும். நாங்கள் வேலை தானே கேட்கிறோம். திரும்பவும் போராட்டத்தில் இறக்கிவிட்டுவிட்டார்கள். எங்களுக்கு நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாக இது இருக்குது. வீட்டில் குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து இங்கு போராடிக்கொண்டு இருக்கிறோம்" என்று லயோலா மணியை பேசவிடாமல் கேள்விகளை அடுக்கினர்.

    Advertisement

    அப்போது பேசிய லயோலா மணி, ஒத்துழைப்பு கொடுங்க, நாளை முறையான அனுமதியோடு ரிப்பன் மாளிகையில் நீங்கள் போராடுவதற்கு உண்டான சூழலை உறுதியாக உருவாக்கி தருவோம்' என்று கூறினார்.

    English Summary

    Sanitation workers staged a protest for the sixth consecutive day in front of the Ripon Building in Chennai. When Loyola Mani arrived to hold talks with them, the workers surrounded him and bombarded him with a barrage of questions. They demanded that Chief Minister Vijay come to meet them, stating, "We are living a life devoid of hope; we have left our children at home to come here and protest."