சவுக்கு சங்கருக்கு இன்ப அதிர்ச்சி.. குண்டர் சட்டம் ரத்து.. உடனே விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

  • சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. தடுப்புக்காவலுக்கு போதுமான காரணம் இல்லை என அறிவுரை வாரியம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு, அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் சேனல்களில் முந்தைய திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். அதேபோல, காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    Advertisement

    இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது ஆன நிலையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்த உத்தரவை அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் பிறப்பித்தார்.

    ஒரு மாதத்திற்கும் மேலாக குண்டர் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    "சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் வைக்கப்படுவதற்கான காரணங்கள் பற்றிய விவரங்கள் அறிவுரை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த அறிவுரை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அவர் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால் உடனடியாக விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு, அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Savukku Shankar: The Tamil Nadu government has revoked the Goondas Act detention imposed on YouTuber Savukku Shankar after the advisory board found no sufficient grounds for preventive detention. Authorities stated he would be released immediately if no other cases are pending against him.