Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.. சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு!

  • சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எழும்பூர் நடுவர் மன்ற நீதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசமும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    Advertisement

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் சேனல்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது, அரசுக்கு எதிராகவும், காவல் அதிகாரிகளுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து பேசி வந்தார்.

    Advertisement

    செய்தி வாசிப்பாளர் கொடுத்த புகார்

    இதையடுத்து, பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவரது குண்டர் சட்டத்தை கடந்த மே மாதம் ரத்து செய்ததையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே, சவுக்கு சங்கர் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும், வழக்கறிஞருமான மகாலட்சுமி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். ”சவுக்கு” இணையதளத்தில் என்னை பற்றி அவதூறாக கருத்துகளை வெளியிட்டு வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

    Advertisement

    சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

    இந்த வழக்கை சென்னை எழும்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவசக்தி, பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

    மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். பெண்களை துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் பிரிவு 4, ஐபிசி 509 ஆகிய பிரிவுகளில் சவுக்கு சங்கருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் அவகாசமும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கில் சவுக்கு சங்கர் உடனடியாக சிறை செல்ல வேண்டியிருக்காது எனத்தெரிகிறது.

    English Summary

    Savukku Shankar sentenced to 3 years in prison; Chennai Egmore Court has sentenced popular YouTuber Savukku Shankar to three years in prison. The Magistrate at the Egmore Court issued this order in connection with a defamation case filed by a woman. The court has also granted Savukku Shankar a period of 30 days to file an appeal against the sentence.