சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பங்களுக்கு தவெக அரசு வழங்கிய பணியாணை ரத்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அண்மையில் முதல்வர் விஜய் அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.
முதலில் இந்த அறிவிப்பு வெளியான போதே இதற்கு மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒரு கட்சி கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு அந்த கட்சிதான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தால், அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். கும்பகோணம் மகாமகம், தருமபுரி பேருந்து எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கும் அரசு வேலையை பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால் என்ன ஆகும் என்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும். போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் தான் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அமர்வு ஜூலை 27ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது காவல் துறை தரப்பு, "பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி என்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்றனர். மேலும் மனுதாரர் தரப்பில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் பணி வழங்கியதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கருணை பணி வழங்கும் போது அரசியலமைப்பு சட்டத்தின் படியே இருக்க வேண்டும். ஆனால் இதில் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. எனவே அரசு பணி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அரசு நினைத்தால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கடந்த 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனு மீது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.