சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சைக்கிள் டெண்டரில் சில மாற்றங்கள் செய்து அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டர் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் டெண்டர் நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில் வைக்கும் வகையிலான நவீன சைக்கிள்களுடன் ஹெல்மெட் வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் உடன், குடிநீர் பாட்டில் வைப்பதற்கான பகுதியும் இணைந்த நவீன சைக்கிள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ரூ.277 கோடியில் 5.32 லட்சம் சைக்கிள்கள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சைக்கிள் டெண்டரில் மாற்றங்கள் செய்து அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பிலான டெண்டர் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 75,000 மிதிவண்டிகளை விற்பனை செய்திருக்க வேண்டும், 75 வணிக வரி ரசீதுகளை சமர்ப்பித்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து டெண்டர் கோருவோருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும், ஒரே ஒரு பிரிவுக்கு மட்டும் விண்ணப்பிப்போருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும் இருக்க வேண்டும் எனத் தளர்த்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு LILAC MIST நிறத்திலும், மாணவர்களுக்கு ARMY GREEN நிறத்திலும் மிதிவண்டி வழங்க வேண்டுமென டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழங்கப்படம் ஹெல்மெட்களுக்கு NABL/BIS அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் சைக்கிள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.