பள்ளி உரிமம் புதுப்பிக்க முந்தைய ஆட்சியில் லஞ்சமா? புகார் கொடுத்தா ஆக்‌ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

  • சென்னை: "பள்ளிகளுக்கான உரிமம் புதுப்பிக்க முந்தைய ஆட்சியில் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தார்கள் என தனியார் பள்ளிகள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்துள்ளார்.

    Advertisement

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் தனியார் மாற்றுத் திறனாளிகள் பள்ளி சார்பில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி சான்றிதழ்கள் வழங்கும் விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

    Advertisement

    அதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுப் பள்ளியில் 11 வயது சிறுமிக்கு மாதவிடாய் என்று கூறி வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளனர். மாதவிடாய் என்றால் தீண்ட தகாததா? இதுபோன்ற பிற்போக்குத்தனமான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் சார்ந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித அழுத்தமும் தரக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் பேசிய அவர், "கடந்த ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு, தற்போதும் தொடரப்பட்டு வருகிறது. அதேபோல், இடைத்தரகர்கள் களையப்பட்டு பொதுமக்களுக்கு முழுமையாக நலத்திட்டங்கள் சென்றடையும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    Advertisement

    பள்ளிக்கூடங்களில் அறிவியலாளர்கள், ஆளுமைகள், கல்வியாளர்களின் திருவுருவப் படத்தை மட்டுமே வைக்க வேண்டும். அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதலமைச்சரும் இதையே விரும்புகிறார்.

    மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள், கழிப்பறை தான் பள்ளிக்கூடங்களின் முக்கிய தேவையாக உள்ளது. ஆகையால், பள்ளிக்கூடங்களில் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேசமயம், மாணவர்களை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும்." எனத் தெரிவித்தார்.

    Advertisement

    மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பள்ளிகளுக்கான உரிமம் புதுப்பிக்க முந்தைய ஆட்சியில் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தார்கள் என தனியார் பள்ளிகள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றும் உறுதி அளித்துள்ளார்.

    அதோடு, "மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளை கஷ்டப்படுத்தக் கூடிய எந்த ஒரு தேர்வு முறைகளும் வேண்டாம் என்றுதான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக சட்ட ரீதியான முன்னெடுப்புகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன்.

    English Summary

    Minister Rajmohan has assured that legal action will be taken if private schools file complaints with proof regarding whom they paid bribes to for the renewal of school licenses during the previous administration.