சென்னை: கணவன் இறந்துவிட்டார்.. அவர் அரசு ஊழியராக இருந்ததால் குடும்ப ஓய்வூதியம் தனக்கு கிடைக்கும் என்று 2-வது மனைவி ஒருவர் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு சென்னை ஹைகோர்ட் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்திருந்தால், அந்த 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது...!!
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர் ஆர். சமன்.. இவரது மனைவி பெயர் நளினி.. ஆனால், நளினியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், 2வதாக தமிழரசி என்பவரை 1991-ல் கல்யாணம் செய்துகொண்டார்..
பிறகு 2006-ல் சமனும் அவரது முதல் மனைவி நளினியும் சேர்ந்து, இனிமேல் பிரிந்து வாழ்வது என ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால், இது நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு கிடையாது. இதற்கு பிறகு ஆர். சமன் இறந்துவிட்டார்.. அவரது மறைவுக்குப் பிறகு, 2-வது மனைவியான தமிழரசி, கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், சமன் ஏற்கெனவே நளினியை திருமணம் செய்திருந்த நிலையில், அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் தமிழரசியை 2-வது திருமணம் செய்திருந்ததால், அவரது ஓய்வூதியக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதனால், தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2023-ம் ஆண்டு தமிழரசிக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து அக்கவுண்டண்ட் ஜெனரல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், 2006-ல் சமனும் நளினியும் செய்துகொண்ட பிரிந்து வாழும் ஒப்பந்தத்தை முக்கியமாக பரிசீலித்தது. "கணவன்-மனைவி இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டது மட்டும் சட்டப்படி விவாகரத்து ஆகாது, முதல் திருமணம் சட்டப்படி முடிவுக்கு வராத நிலையில் 2-வது திருமணம் நடந்ததால் தமிழரசியின் திருமணம் செல்லத்தக்கதாக கருத முடியாது. என, இதனடிப்படையில், தனி நீதிபதி 2023-ல் வழங்கிய உத்தரவை டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. முதல் திருமணம் சட்டப்படி முடிவுக்கு வராத நிலையில் நடந்த 2-வது திருமணத்தின் அடிப்படையில் தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. தமிழரசி ஏற்கெனவே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியராக இருந்து, தனக்கான ஓய்வூதியத்தை பெற்று வந்ததாகவும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. அதேபோல், முதல் மனைவியுடன் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்திருந்தாலும், அதை மட்டும் வைத்து சட்டப்படி விவாகரத்து பெற்றதாக கருத முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பு 2-வது திருமணத்தில் பிறந்த குழந்தைகளின் உரிமையைப் பற்றியது அல்ல. 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா என்பதுதான் இந்த வழக்கில் எழுந்த முக்கியமான கேள்வி. அதற்கு, முதல் திருமணம் சட்டப்படி முடிவுக்கு வராத நிலையில் நடந்த 2-வது திருமணத்தை அடிப்படையாக வைத்து குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மெட்ராஸ் ஹைகோர்ட்
2வது மனைவி
ஓய்வூதியம் கிடையாது
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்