பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.. விடை தெரிய வேண்டிய முக்கியமான கேள்விகள்

  • சென்னை: பட்டினப்பாக்கம் என்றால், அது கோடீஸ்வரர்கள் வாழும் எம்.ஆர்.சி நகருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அங்குப் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது? அரசு காலியாக உள்ள இடத்தில் தானே கட்டப் போகிறது? மீனவர்கள் யாரையும் வெளியேற்றவா போகிறார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் எழலாம்.

    Advertisement

    பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பயன்பாட்டில் இல்லாத குடியிருப்புப் பகுதியில்தான் தலைமைச் செயலகத்தை அமைக்க அரசு விரும்புகிறது. முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகிலேயே இது இருக்கிறது. மேலும், இந்த இடத்தை சுற்றிலும் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள், நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்கள் அமைந்துள்ளன.

    Advertisement

    பசுமை வழிச்சாலையிலிருந்து நேராக விஐபிக்கள் வாகனத்தை எடுத்தால், எம்.ஆர்.சி நகரைத் தாண்டி, பட்டினப்பாக்கம் பீச் ரோடு வழியாகவே செல்கிறார்கள். எனவே, இந்த இடத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் நிர்வாக ரீதியாக எளிதாக இருக்கும்; அரசு ஊழியர்களுக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது என்று அரசு கருதுகிறது. புவியியல் ரீதியாகவும் அணுகுசாலை வசதி, தொலைவு என அனைத்து அம்சங்களும் சரியாகவே பொருந்துகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    ஆனால், உண்மையான சிக்கல்கள் வேறு இடத்தில் இருக்கின்றன...

    அப்படி என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது என்று கேட்கிறீர்களா? இதை பாருங்கள்...

    Advertisement

    மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியின் ஒரு பகுதிதான் பட்டினப்பாக்கம். பட்டினப்பாக்கம் என்பது வெறும் கடற்கரை மட்டும் என்று நினைத்தால் அது தவறான புரிதல்; அது மயிலாப்பூர் - மந்தைவெளியின் முக்கிய அங்கம். இந்த இடத்தை சுற்றிலும் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. செட்டிநாடு வித்யாஷ்ரம், சாந்தோமில் அடுத்தடுத்து உள்ள இரு பள்ளிகள், சாந்தோம் தேவாலயம், மந்தைவெளியில் இயங்கும் செயிண்ட் ஜான்ஸ் பள்ளி மற்றும் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகள் எனச் சுற்றிலும் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ளன.

    இங்குச் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் பலரும் தினமும் பட்டினம்பாக்கத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஏற்கனவே அந்தச் சாலைப் பகுதி மிகக் குறுகலாகவும் நெரிசல் மிகுந்ததாகவும் இருக்கிறது. இந்நிலையில் தலைமைச் செயலகமும் அங்கு வந்தால், மாலையில் அரசு ஊழியர்கள் வீடு திரும்புவதும், பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதும் ஒரே நேரத்தில் நடக்கும். அது ஒட்டுமொத்தப் பகுதியையும் ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்குப் பெரு நெரிசலை உருவாக்கும்.

    Advertisement

    ஏற்கனவே இங்குச் சாலை வசதி போதவில்லை என்பதால், மீனவர்களின் பாரம்பரிய நிலப் பகுதியைத்தான் அரசு சாலை விரிவாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது. 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பட்டினப்பாக்கம் பீச் சாலையில் வாகனப் போக்குவரத்து இருக்காது; மீன் சந்தை மட்டுமே இயங்கி வந்தது. இப்போது அந்தச் சாலையை அகலப்படுத்தி அரசு பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வருகிறது.

    அங்குச் சாலையோரத்தில் மீன் விற்பதால் நெரிசல் ஏற்படுவதாகவும், அசுத்தமாக இருப்பதாகவும் கருதிய அதிகாரிகள், அங்கிருந்த பல மீனவர்களை அருகில் உள்ள மீன் சந்தை வளாகத்திற்குள் மாற்றினர். இதனால், அப்பகுதி எப்போதுமே நெரிசலான சாலையாக மாறிவிட்டது.

    Advertisement

    இப்போது அங்குத் தலைமைச் செயலகம் அமைந்தால், மீனவர்கள் சாலையோரத்தில் கடைகளை அமைக்கவே முடியாது. மெரினா கடற்கரையைப் போலச் அங்குக் கடைகளை நடத்த அனுமதி கிடைக்காது. மீன் சந்தைக்குள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் தங்கள் வலைகளைக் காய வைப்பது கூடப் பெரும் சவாலாக மாறும். பட்டினப்பாக்கம் என்பது பல தலைமுறைகளாக மீன்பிடிப் படகுகளை நிறுத்தும் மற்றும் வலைகளைப் பழுதுபார்க்கும் பாரம்பரியக் களமாக உள்ளது.

    இந்த சூழலில் தலைமைச் செயலகம் வரும் பட்சத்தில், அப்பகுதி அதிமுக்கிய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். இதனால் மீனவர்கள் சுதந்திரமாக வந்து செல்வது கட்டுப்படுத்தப்பட்டு, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    Advertisement

    காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பகுதியாக இது மாறுவதால், சென்னையின் ஒரு பாதி மக்கள் பயன்படுத்தும் பட்டினப்பாக்கம், மூச்சுவிடக் கூட முடியாத அளவுக்கு நெரிசலில் திணறும்.

    இதுமட்டுமல்லாமல், கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கியபோது பட்டினப்பாக்கம் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, கடலோரப் பகுதியில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது எதிர்காலத்தில் பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடும் என்பதே எதார்த்த நிலவரம்!

    அதேபோல் கடலோரப் பகுதியில் (CRZ-1 & CRZ-2) இவ்வளவு பெரிய அரசு நிர்வாகக் கட்டடங்களைக் கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடுமையான அனுமதி தேவையாக இருக்கும். மணற்பாங் கரான கடற்கரைப் பகுதியில் 'அதிநவீன அஸ்திவாரம்' (Deep Pile Foundation) அமைப்பது தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மிக அதிகச் செலவை ஏற்படுத்தும்.

    அதேபோல் பட்டினம்பாக்கத்திற்கு வர Santhome High Road மற்றும் Greenways Road மட்டுமே முக்கிய வழிகள் தான் உள்ளன, இவை இரண்டுமே ஏற்கனவே உச்சகட்ட நெரிசலில் இருக்கும். அவசரக் காலத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறவோ அல்லது தீயணைப்பு/ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவோ மாற்றுப் பாதைகள் ஏதும் இல்லை.

    English Summary

    Many people think of Pattinapakkam simply as a coastal area located near MRC Nagar, a neighborhood inhabited by multi-millionaires. Questions might arise: What problems could possibly arise if the new Secretariat is built there? After all, isn't the government planning to build it on vacant land? Are they really going to evict any fishermen?