சென்னை: என் அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் என சென்னை திருவேற்காட்டில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைத்திருந்தார்.
சென்னை திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் வந்த அதே நேரத்தில் அங்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்திருந்தார்.
அப்போது உதயநிதியும் சீமானும் பரஸ்பரம் வணக்கம் கூறி கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். இதையடுத்து நாற்காலியில் உட்கார போகும் போது கூட சீமான் கையை பிடித்து அழைத்து சென்ற உதயநிதி, தனது அருகே உட்கார வைத்தார். அது போல் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கையும் உதயநிதி, கை பிடித்து அழைத்து சென்று தனது அருகே உட்கார வைத்துக் கொண்டார். பின்னர் முபாரக்குடன் உதயநிதி பேசினார். அது போல் சீமானும் உதயநிதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர். உதயநிதியும் சீமானும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் ஸ்டாலினும் சீமானும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு பேசினர். அரசியலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலும் ஒரு பொது நிகழ்வில் இவர்கள் பாசப்பிணைப்புடன் இருந்தது காண்போரை நெகிழச் செய்தது. மேலும் அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என யூகங்கள் வெளியாகியுள்ள நிலையில் உதயநிதி- சீமான் இடையே இணக்கமான சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த திருமண விழாவில் சீமான் பேசுகையில் திருமணம் இணையில்... இந்த திருமண நிகழ்விற்கு வாழ்த்த வந்திருக்கிற, போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய பெருமக்கள், டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, எம்.ஆர். பன்னீர்செல்வம், ராஜ கண்ணப்பன், ஆவடி நாசர் அவர்கள், எஸ்டிபிஐ (SDPI) கட்சியினுடைய தலைவர் முபாரக், என்னுடைய அன்பு தம்பி, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, நம் எண்ணற்ற சார்ந்தோர்கள், பெருமக்கள், அரங்கை நிறைத்து அமைந்திருக்கிற என் உயிர் சொந்தங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். இது கட்சி அரசியலைக் கடந்த ஒரு குடும்ப நிகழ்வு. இங்கே எங்களுடைய அப்பா துறைமுகம் காஜா தன்னுடைய பேரன்பினாலும், இனிய எளிய அணுகுமுறையாலும் எல்லோரையும் தன் உறவாக்கிக் கொண்ட ஒரு பெருந்தகை. நான் வந்தவுடன் என்னை கட்டி அணைத்து, 'ஏன் என் அண்ணன் மகளை (கயல்விழி) நீ அழைத்து வரவில்லை?' என்றுதான் கேட்டார். அந்த அளவிற்கு ஒரு பாசப் பிணைப்பில், அன்பின் இணைப்பில் ஒருங்கிடைந்த குடும்பம் நாங்கள். அவர்கள் மணமக்களாக வீற்றிருக்கிற அன்பு பிள்ளைகளுக்குச் சொல்லுவேன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், 'பெற்றோர்களின் கடமை, பெற்றோர்களின் உயரிய உரிய பொறுப்பு என்பது தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுப்பதுதான்' என்கிறார். அப்படிப்பட்ட ஒழுக்கத்தையும் கல்வியையும் கொடுக்கிற பெற்றோர்களாக நீங்கள் இருக்க வேண்டும். நம்முடைய வள்ளுவர் தந்தருளிய மறைமொழிக்கேற்ப, 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறள்வழி நடந்து, எல்லோரும் போற்றுகிற அளவிற்கு, 'வருங்கால தலைமுறை இந்த தம்பதியினரை போல, இந்த இணையரைப் போல இணைந்து வாழுங்கள்' என்று எடுத்துக்காட்டிப் பேசுகிற அளவிற்கு நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனும் ஆகிய ஏக இறைவன் அல்லாஹ்வின் பேரருள் இந்த மணமக்களுக்குக் கிடைக்கட்டும் என்று நான் துவா செய்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார். சீமான், உதயநிதியை அன்பு தம்பி என அழைத்ததும் அங்கு கரகோஷம் எழுந்தது. இந்த விழாவில் உதயநிதியும் சீமானும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.