சிரிப்பதா, அழுவதா? ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு சேம்பு பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? சீமான் கேள்வி

  • சென்னை: ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஆற்றில் நுரை பொங்க, சோப்பு, ஷாம்பு மற்றும் கழிவுநீர் கலப்பதே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் கூறிய நிலையில் சீமான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    மேலும், மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது எனவும், இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்!. என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    சிரிப்பதா.. அழுவதா?

    ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?.. ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்.. சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை!

    ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா?

    Advertisement

    இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா?

    தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா?

    ஆறுகளில் நுரை பொங்க காரணமே இதுதான்.. வித்தியாசமான ரீசனை சொன்ன தவெக அமைச்சர் ராஜீவ்!

    ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு?

    Advertisement

    நுரைக்கான காரணம் என்ன?

    சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் கேட்பது, "எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?" என்ற விளம்பர விளக்கமல்ல; "எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்பதற்கான பதில்!

    என்னை போட்டுத் தள்ள ப்ளான்.. இடைத் தேர்தலை கொண்டு வரலாமா என பேசினாங்க! அமைச்சர் விஸ்வநாதன் பகீர்
    Advertisement

    தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்!

    சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பீர்கள்?

    ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது!.. இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்!.. என்று கூறியுள்ளார்.

    English Summary

    Seeman, leader of the Naam Tamilar Katchi, has asked whether the Minister will disclose the names of the soaps and shampoos that are causing foam to form in the river. This question follows a statement by the Minister for Environment and Climate Change, Rajeev, who identified the presence of soaps, shampoos, and sewage as the primary reasons for the foam accumulating in the river.