ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது.. 200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு! தலை சுற்ற வைத்த கரண்ட் பில்! கண்டனம்!

  • சென்னை: தமிழகம் முழுவதும் மின் அளவீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலருக்கும் கடந்த மாதங்களை விட அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் 200 அலகுகள் (யூனிட்) வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக நாதக சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்," தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    Advertisement

    தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

    சீமான்

    மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது.

    Advertisement

    மின்கட்டணம்

    தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும்.

    மின்கணக்கீட்டில் குளறுபடி

    தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிடப் பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும்.

    Advertisement

    அளவீட்டுக் கருவி

    மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இதுபோன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

    200 யூனிட் இலவசம்

    ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Seeman slams the TVK government over steep power bill hikes, alleging flaws in meter readings and the 200-unit free electricity scheme.