பரந்தூர் விமான நிலையம்.. மத்திய அரசிடம் இடமாற்றம் செய்ய விஜய் கோராதது ஏன்? சீமான் கேள்வி

  • சென்னை: சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

    Advertisement

    ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தவெக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. முதல்வராவதற்கு முன்பாக விஜய் நேரடியாக பரந்தூர் சென்று விவசாயிகள் மற்றும் பாதிக்கப்படும் குடும்பங்களை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் தவெக பொதுக்குழுவிலும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பரந்தூர் மக்கள் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

    Advertisement

    இதன்பின் விஜய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    அதன்படி சென்னையின் 2வது விமான நிலையத்தை பரந்தூருக்கு மாற்றாக வேறு இடத்தில் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய இணையமைச்சர் முரளிதர மோஹோல் தெரிவித்துள்ளார். இதனால் தவெகவின் நிலைப்பாடு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து சீமான், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெசு அரசு, பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது.

    ஆனால் நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெசு அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

    Advertisement

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது என்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளை நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா?

    அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன? ஆகவே, பாந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.

    English Summary

    Seeman: Seeman Questions CM Vijay, Why TVK Govt Has Not Requested Centre to Shift Parandur Airport Site