கையாலாகாத்தனம்.. 3வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மோடியிடம் சரணாகதி அடைந்த விஜய்! சீமான் அட்டாக்

  • சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழா வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    Advertisement

    அதன் பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழைத் தாயாகப் போற்றும் தமிழக மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதித்துவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்," நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும்.

    Advertisement

    ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.

    கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

    English Summary

    Seeman criticised Vijay government after Tamil Thai Vazhthu was placed third at Manonmaniam Sundaranar University event.