அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!

  • சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பான திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கோயில் அறங்காவலர் குழு நியமன பொறுப்புகளில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைமை அமைத்த 'கள ஆய்வுக்குழு' தனது விரிவான அறிக்கையை அறிவாலயத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை மண்டலத்தின் முக்கியப் புள்ளியும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருப்பது திமுக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    சேகர்பாபு அமைச்சராக இருந்த போது அவர் எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளே கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பு வகித்த போது, கோயில்களில் அமைக்கப்பட்ட நியமன பொறுப்புகளில் பாரபட்சமும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த, பாரம்பரியமிக்க திமுக உடன்பிறப்புகளுக்குக் கோயில் அறங்காவலர் குழுக்களில் உரிய முக்கியத்துவமும் பதவிகளும் வழங்கப்படவில்லை என்றும், மாறாக, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கும், 'தனக்கு வேண்டியவர்களுக்கும்' மட்டுமே மிக முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிரான உள்ளடி வேலைகளாக மாறி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கள ஆய்வுக்குழு தனது அறிக்கையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

    ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் தோல்விக்கு சேகர்பாபு முறையாக பணியாற்றாததே காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. சேகர்பாபு பெயரளவில் மட்டுமே தேர்தல் பணிகளை செய்ததாலேயே ஸ்டாலின் தோல்வி அடைந்தார் என்று திமுகவினரே விமர்சித்து வருகின்றனர். இதனால் சேகர்பாபு மீது நடவடிக்கை பாயுமா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.

    English Summary

    Sekarbabu: DMK Post-Poll Report Blames Former Minister Sekarbabu, Cites Favoritism in Temple Trustee Appointments