கொளுத்திப் போட்ட செல்வப்பெருந்தகை.. யாருங்க அவரு?” கோப முகம் காட்டிய பிரவீன் சக்கரவர்த்தி!

  • சென்னை: ராகுல் காந்தியை பிரதமராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பிய நிலையில், "அவரு யாருங்க இப்போ?" என எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக அமைந்த நிலையில், முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ் கட்சி. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    பிரதமர் வேட்பாளர்

    இந்தச் சூழலில் 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விஜய்தான் என்று தவெகவினர் கூறி வருகின்றனர். அதேசமயம், பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தவெக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இடையிலும் இதுதொடர்பாக மோதல் வெடித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    செல்வப்பெருந்தகை சொன்னது என்ன?

    இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "ராகுல் காந்திதான் பிரதமர் என்றால், அவர்தான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும்?

    Advertisement

    ராகுல் காந்தி தான் பிரதமர் என்று சபதம் ஏற்போம். அவரை பிரதமராக நேர்மையாக ஒப்புக் கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்பதுதான் நேர்மையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

    பிரவீன் சக்கரவர்த்தி ரியாக்‌ஷன்

    காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செல்வப்பெருந்தகையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "அவரு யாருங்க இப்போ? எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா.. இருந்திருக்கலாம். முன்னாள்... கடந்த காலத்துல என்ன வேணா இருந்திருக்கலாம். இப்போ அதெல்லாம் அவசியமே கிடையாது" என்றார்.

    மேலும் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, "எந்தக் குழப்பமும் இல்லை. நான் பல முறை நான் சொல்லி இருக்கேன். இப்போ இந்த கூட்டணிக்கு ஒரு பேர் சூட்டுறதுக்காக ஒரு மீட்டிங் நடந்தது. எல்லா தோழமைக் கட்சிகளும் அதுல பங்கேற்றோம். நானும் சென்றிருந்தேன். இண்டு மணி நேரம் கூட்டம் நடந்தது. முதலமைச்சரும் இருந்தார். எல்லோரும் சிரித்து பேசினோம். பிரச்சனை எதுவும் இல்லை.

    Advertisement

    ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன்

    கூட்டணி ஆட்சி அமைக்கிறதுக்கு முன்பு எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்ததோ, அவ்வளவு ஸ்ட்ராங்கா இன்னும் இருக்கிறது. அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் இப்பதான் டெல்லியில இருந்து வருகிறேன். நான் நேற்றுதான் எங்க தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தேன். ஒன்னும் பிரச்சனை எதுவும் இல்லை.

    தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் பேசப்பட்டது. மத்த விஷயமும் பேசப்பட்டது. எனக்கு ஒரு அகிய இந்தியப் பொறுப்பு இருக்கு, அதைப் பற்றியும் பேசினோம். தமிழ்நாடு அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் பேசப்பட்டது. எங்களுக்கு இங்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று எல்லாம் கூட பேசப்பட்டது.

    Advertisement

    ஒரு சதவீதம் கூட பிரச்சனை கிடையாது. தேர்தலுக்கு முன்னாடி கேட்டது என்ன? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. அப்போது சிலர் சொன்னார்கள், தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்கள். இப்போது ஏற்றுக்கொண்டார்களா இல்லையா? எங்களுக்கு ஒரு மதிப்பு, ஒரு மரியாதை அது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுதான் முதல் முறை ஒரு நல்ல கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

    காங்கிரஸ் தலைவர்கள்

    தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து தவெக தலைமையில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியை கடந்த வாரம் உருவாக்கினர்.

    Advertisement

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அதற்கான காலம் வரும்போது அனைவரும் வெளிப்படையாக அறிவிப்பார்கள்" என்று கூறியிருந்தார்.

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார், "தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போதெல்லாம் விஜய்தான் அடுத்த பிரதமர் என்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். ஒருவேளை அதற்குத் தவெக உடன்படாவிட்டால், காங்கிரஸின் இரண்டு அமைச்சர்களும் பதவிகளில் நீடிக்க மாட்டோம்." என்று தெரிவித்திருந்தார்.

    English Summary

    Former Tamil Nadu Congress Committee President Selvaperunthagai has stirred up a controversy by questioning why an alliance should be formed with those who do not accept Rahul Gandhi as Prime Minister. Congress MP Praveen Chakravarthy reacted to this.