Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு!

  • சென்னை: கோபி செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகவும், காலாவதியான நோட்டரி சான்றொப்பம் ஏற்கப்பட்டுள்ளதாகவும், எனவே செங்கோட்டையன் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4 ஆம் தேதி வெளியானது. இதில் 108 இடங்களை வென்ற விஜய்யின் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், உயர் நீதிமன்றங்களில் வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து மனு

    நேற்று ஒரே நாளில் மட்டும் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு, கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், அம்பை தொகுதியில் வென்று ராஜினமா செய்த இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பனும் நேற்று புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். 3 தவெக எம்.எல்.ஏக்கள், ஒரு அதிமுக எம்.எல்.ஏக்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கோபி செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிமுக எம்பியும் வழக்கறிஞருமான இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இன்பதுரை கூறியிருப்பதாவது:-

    Advertisement

    காலாவதியான நோட்டரி சான்றொப்பம்

    அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனுவில் குளறுபடி! காலாவதியான நோட்டரி சான்றொப்பத்தை ஏற்ற கோபிசெட்டிப்பாளையம் தேர்தல் அதிகாரியின் செயல் சட்டவிரோதம்! செங்கோட்டையன் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (EP) தாக்கல்!" என்று கூறியுள்ளார். செங்கோட்டையன் வேட்பு மனு பரிசீலனையின் போதே அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது.

    செங்கோட்டையன் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞரால் சான்றொப்பம் இடப்பட்டவை என்றும் கூறி அதிமுக வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்டு வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு நீண்ட இழுபறிக்கு பிறகு வேட்பு மனு ஏற்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தான் தேர்தல் முடிந்த நிலையில், செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இன்பதுரை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தவெகவில் பரபரப்பு

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட நல்ல சிவம் 65,992 வாக்குகளையும் அதிமுக சார்பில் போட்டியில் பிரபு விபி 56,232 வாக்குகளையும் பெற்றனர்.

    நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 8137 வாக்குகள் பெற்றார். தவெகவில் சீனியர் அமைச்சராகவும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமாக இருக்கக் கூடிய செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Sengottaiyan: A petition has been filed in the Madras High Court challenging Minister Sengottaiyan’s victory from the Gobichettipalayam constituency. AIADMK candidate Prabhu alleged irregularities in the nomination process, including acceptance of an expired notarized document, and sought to declare the election invalid.