அறைக்கு வாங்க.. சட்டசபையில் நடந்த ரகசிய நகர்வு.. மதிமுக எம்எல்ஏ-வுக்கு செங்கோட்டையன் கொடுத்த சிக்னல்

  • சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை முடிவடைந்த பின் அனைத்து எம்எல்ஏ-க்களும் கலைந்து சென்ற போது, மதிமுக எம்எல்ஏ-க்களான கடையநல்லூர் ராஜேந்திரன், சீர்காழி செந்தில் செல்வன் இருவரும் காத்திருந்தனர். அப்போது மதிமுக எம்எல்ஏ-க்களை நோக்கி புன்னகையுடன் வந்த செங்கோட்டையன், அவர்களுடன் கைகுலுக்கிவிட்டு மாடி அறைக்கு வருமாறு சிக்னல் காட்டி சென்றார்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் அரங்கேறி வரும் சில முக்கிய நகர்வுகள், தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளை உருவாக்குமோ என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே அண்மையில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருந்த சூழலில், இன்று சட்டசபையில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இன்று சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்த அனைத்து கட்சி எம்எல்ஏ-க்களும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து மெதுவாகக் கலைந்து வெளியேறத் தொடங்கினர். ஆனால், மதிமுக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களான கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன் ஆகிய இருவரும் அவசரப்படாமல் இருக்கையிலேயே அமர்ந்து காத்திருந்தனர்.

    Advertisement

    அவை ஓரளவுக்குக் காலியான வேளையில், அமைச்சர் செங்கோட்டையன், அந்த மதிமுக எம்எல்ஏ-க்களை நோக்கி புன்னகையுடன் நடந்து வந்தார். இருக்கையில் காத்திருந்த கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன் ஆகிய இருவருடனும் செங்கோட்டையன் கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாறிக்கொண்டார்.

    அதன் பிறகு, மேலே இருக்கும் தனது மாடி அறைக்கு வருமாறு மதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஒரு ரகசிய சிக்னலை காட்டிவிட்டு அங்கிருந்து செங்கோட்டையன் நகர்ந்தார். செங்கோட்டையனின் இந்த சிக்னலைத் தொடர்ந்து மதிமுக எம்எல்ஏ-க்களும் அவரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    சமீபத்தில் மதிமுகவின் உச்சகட்டத் தலைவர்களான வைகோ மற்றும் துரை வைகோ ஆகிய இருவரும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அரசியல் ரீதியாகப் பேசியிருந்தனர். இந்த சந்திப்பு திமுக கூட்டணியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், இன்று சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன், மதிமுக எம்எல்ஏ-க்களைத் தனியாக மாடி அறைக்கு அழைத்துப் பேசியிருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஜூன் 27ஆம் தேதி மதிமுக பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் தொடர்வதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே தவெகவுடன் வைகோ மற்றும் மதிமுகவினர் நெருக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 2 எம்எல்ஏ-க்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    Sengottaiyan: Sengottaiyan’s Closed-Door Call to MDMK MLAs inside the Tamilnadu assembly Sparks Buzz Amid TVK - MDMK Warmth