மாதவரம் தவெக எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் மின்தடை.. 20 நிமிடம் கட்.. மைக் இல்லாமலே பேசி சென்றார்

  • சென்னை: மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ விஜய் பிரபு பங்கேற்ற நிகழ்விலேயே மின்தடை ஏற்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையில் சீரமைக்கப்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் விழாவில் மாதவரம் தொகுதி எம்எல்ஏ விஜய்பிரபு பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மைக் இல்லாமல் பேசும் நிலை ஏற்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது.

    Advertisement

    தமிழகத்தில் மின் தடை அடிக்கடி ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    Advertisement

    மின் தடையால் மக்கள் அவதி

    திடீர் திடீர் என மின் தடை ஏற்படுவதால் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆனால் தவெக அமைச்சர்கள் எதாவது ஒரு காரணம் சொல்லி வருகிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறைந்து இருப்பதாகவும், அண்டை மாநிலங்களில் கூட மின் தட்டுப்பாடு இருப்பதாகவும் அமைச்சர்கள் கூறி வந்தனர். மின் தடை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் இனி மின் தடை ஏற்படாது என்றும் அமைச்சர்கள் கூறினர்.

    ஆனாலும் தலைநகர் சென்னை முதல் கடைகோடியில் இருக்கும் குமரி வரைக்கும் பாரபட்சம் இல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கதையாகி வருவதாகவே மக்கள் வேதனையுன் தெரிவித்து வந்தனர். இப்படி மக்கள் ஒருபுறம் குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் நேரலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போதே மின் தடை ஏற்பட்டதும் தொடர்கதையாகியது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் கரண்ட் கட் ஆனது.

    Advertisement

    எம்.எல்.ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பவர் கட்

    இதே போன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற நிகழ்ச்சியின் போதும் பவர் கட் ஆனது. இப்படி தவெகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட பவர் கட்டாகி வந்தது. மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல்வர் மின்சார வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகும் மின் வெட்டு குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் பழைய நிலையே தொடர்ந்தது.

    எனினும் ஒருசில பகுதிகளில் முன்பு போல் இப்போது பவர் கட் ஆகவில்லை, நிலைமை சரியாகிவிட்டது என மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் தான் தவெக எம்.எல்.ஏ விஜய் பிரபு பங்கேற்ற நிகழ்விலேயே மின் தடை ஏற்பட்டது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாதவரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் பிரபு இன்று சீரமைக்கப்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

    Advertisement

    இந்த விழாவிற்கு வருகை தந்த விஜய் பிரபு மக்களுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த போது திடீரென பவர் கட் ஆனது. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகே மீண்டும் கரண்ட் வந்தது. இதனால் மைக் இல்லாமலேயே விஜய் பிரபு எம்.எல்.ஏ பேசி சென்றார்.

    English Summary

    A power outage occurred during an event attended by Madhavaram MLA Vijayaprabhu in Chennai. The MLA was participating in the inauguration ceremony of the renovated Red Hills (Sengundram) bus terminus when the power cut took place, forcing him to speak without a microphone. Power was restored only after about 20 minutes.