சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி அணியின் புதிய தலைவராக ஆர்.செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி அணியின் தலைவராக இருந்த ரஞ்சன் குமார், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் SIT விசாரணைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி அணி தலைவராக எம்.பி.ரஞ்சன்குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். இவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ஏற்கெனவே தான் புகார் அளித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ரஞ்சன்குமார். ஜெம் வீரமணி, கல்வி உதவி வழங்குவதாகக் கூறி ஏமாற்றி சிறுமிகளை சீரழித்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் காங்கிரஸ் மாநில நிர்வாகி எம்.பி.ரஞ்சன் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியுடன் ஜெம் வீரமணி இருந்த வீடியோக்களை காட்டி அவரிடம் சாந்தியுடன் இணைந்து ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டியது உண்மையா என்பது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எஸ்ஐடி அதிகாரிகள் எழுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் உள்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி அணியின் தலைவராக ஆர்.செந்தமிழ் செல்வனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. அணி செயல் தலைவர்களாக பி.வி.தமிழ்செல்வன், ஆர்.கலைச்செல்வன் ஆகியோரை எஸ்.சி. அணியின் அகில இந்திய தலைவர் ராஜேந்திர பால் கவுதம் நியமித்துள்ளார்.