உள்ளே வந்த ஸ்ரீநிதி.. காங்கிரசை திக்கி தண்ணி குடிக்க வைத்த செந்தில் பாலாஜி.. திமுக முரட்டு சம்பவம்

  • சென்னை: சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநிதி, நேற்று காங்கிரசிலிருந்து விலகி திமுகவில் இணைந்துகொண்டார். செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டிலேயே இந்த இணைப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள் திமுகவும் காங்கிரசும்.

    Advertisement

    சிங்கநல்லூர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஸ்ரீநிதி நிறுத்தப்படும் வரையில் அவரைப்பற்றி காங்கிரசில் யாருக்கும் தெரியவில்லை. அவரது பெயர் அறிவிக்கப்பட்டப்பிறகுதான் யார் இந்த ஸ்ரீநிதி என்கிற விவாதமும், அவரைப்பற்றிய தகவல்களும் பரபரப்பாக தேடப்பட்டன ; பேசப்பட்டன !

    Advertisement

    இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ''தேர்தலுக்கு முன்பு தொகுதிகளின் எண்ணிக்கையும் ஒதுக்கீடும் குறித்து நடத்த பேச்சுவார்த்தையில் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள், அதையொட்டி மனக்கசப்புகள் என நிறைய நடந்தது. கூட்டணி முறியலாம் என்கிற அளவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதை காங்கிரஸில் உள்ள சிலரே ஊதிப் பெரிதாக்கினார்கள். ஒரு கட்டத்தில், மனக்கசப்புடன் கூட்டணி நீடிப்பதை உறுதி செய்யப்பட்டது. இதெல்லாம் நடந்த கதைதான்.

    இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கக் கூடாது; ஜெயிப்பதற்கான வாய்ப்புகளையும் திமுக உருவாக்கக்கூடாது. அதேசமயம், காங்கிரசில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் திமுக சொல் பேச்சு கேட்கும் நபர்களாக இருக்க வேண்டும் என திமுக திட்டமிட்டது. அதற்கேற்ப, காங்கிரசில் சிலருக்கு சீட் வாய்ப்புகளையும் வாங்கித் தந்தது திமுக. அதில், பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜிகே மணியின் மகன் தமிழ்க் குமரன், சிங்காநல்லூரில் போட்டியிட்ட ஸ்ரீநிதி, கடலூரில் போட்டியிட்ட சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் சீட் பெற்றதில் திமுகவின் பங்களிப்பு அதிகம். குறிப்பாக, தமிழ்க்குமரனுக்கும் ஸ்ரீநிதிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு உண்டு. ஏனெனில், கோவையில் கமலின் கட்சியில் ஸ்ரீநிதி இருந்த போதே திமுகவின் செந்தில்பாலாஜியின் ஆதரவாளராகத்தான் இருந்தார்.

    Advertisement

    கமல் கட்சியிலிருந்து அவர் விலகினார். சிங்காநல்லூர் தொகுதியை ஸ்ரீநிதிக்காகவே திமுக தலைமையிடம் சொல்லி ஒதுக்க வைத்தவர் செந்தில் பாலாஜி. தனது ஆதரவாளரான ஸ்ரீநிதியை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் செல்வப்பெருந்தகையிடம் திமுக தலைமையை பேச வைத்ததும் செந்தில்பாலாஜிதான். அந்த வகையில், ஸ்ரீநிதிக்கு வாய்ப்புத் தந்தது காங்கிரஸ். இதை காங்கிரஸ் தொண்டர்கள் ரசிக்கவே இல்லை. தேர்தலில், ஸ்ரீநிதியின் வெற்றிக்காக எவ்வளவோ முயற்சிகளை செந்தில் பாலாஜி எடுத்தும் அது வொர்க் அவுட் ஆகவில்லை. ஸ்ரீநிதி தோற்றுப் போனார். ஒருவேளை அவர் ஜெயித்திருந்தால் கூட, திமுகவை விட்டு காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைத்தபோது, செந்தில் பாலாஜியின் யோசனையின்படிதான் அவர் செயல்பட்டிருப்பாரே தவிர, காங்கிரஸ் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்க மாட்டார்.

    Advertisement

    இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வி அடைந்த தொகுதிகளில், தோல்விக்கான காரணங்களை கண்டறிய முன்னாள் எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. சத்தியமூர்த்திபவனில் நடந்த அந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் ஸ்ரீநிதி. அவரிடம் காரணம் கேட்கப்பட்டது. அப்போது, என் தோல்விக்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் தான் காரணம். திமுக மீதுள்ள வன்மத்தால் என்னை தோற்கடிக்க தவெகவுக்கு ஓட்டுப்போட்டனர். அதனால், கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் ஆக்சன் எடுக்க வேண்டும் என கோபமாக பேசியிருக்கிறார்.

    அதனை ஜெயக்குமார், கண்டித்திருக்கிறார். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரச்சாரத்துக்கு செல்லும் நேரத்தை விட திமுக போட்டுக்கொடுத்த ரூட்டில் பிரச்சாரம் செய்ததுதான் அதிகம். அதாவது திமுகவின் சொல்படிதான் நீங்கள் நடந்து கொண்டீர்கள் என கண்டித்திருக்கிறார் ஜெயக்குமார். இப்படிப்பட்ட நிலையில் தான் காங்கிரசை விட்டு விலகி திமுகவில் நேற்று சேர்ந்து விட்டார் ஸ்ரீநிதி. செந்தில்பாலாஜியின் யோசனையில் தான் இது நடந்தது'' என்று பின்னணி தகவல்களை விவரிக்கிறார்கள் கதர்சட்டையினர்.

    Advertisement

    ஸ்ரீநிதி இணைப்பு குறித்து திமுக தரப்பில் விசாரித்தபோதும், செந்தில் பாலாஜிதான் பின்னணியில் இருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Senthil Balaji’s Masterstroke: Why Congress Singanallur Candidate Srinidhi Defected to DMK Post-Election