கணக்கு தீர்க்க கரூர் கேஸ்! என்னை சிக்க வைக்க ப்ளான் பண்றாங்க! ஜாமீன் மனுவில் கொட்டித் தீர்த்த செ.பா!

  • சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் செந்தில் பாலாஜி பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    குறிப்பாக கரூர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கரூர் துயர வழக்கிலும், குதிரை பேர வழக்கிலும் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தனித்தனியாக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    செந்தில் பாலாஜி

    அந்த மனுவில், "இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்கூட (FIR) குற்றம்சாட்டப்பட்டவராக என் பெயர் இடம்பெறவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இந்த விவகாரத்தில் என்னை வலுக்கட்டாயமாக சிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், "நான் இளையராஜாவை தொடர்புகொண்டதற்கோ, அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்கோ, நேரில் சந்தித்ததற்கோ, பணம் கொடுத்ததற்கோ அல்லது மிரட்டல் விடுத்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. எனது சார்பில் யாரேனும் செயல்பட்டதாகவும் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா

    அதேநேரத்தில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய கருத்துகளையும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள செந்தில் பாலாஜி, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக இன்னும் பல கணக்குகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன என்று அமைச்சர் பேசியிருப்பது, அரசியல் பழிவாங்கல் குறித்த எனது அச்சத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கரூர் துயர சம்பவம்

    குறிப்பாக, கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில், தன்னை கரூர் துயர வழக்குடனும், குதிரை பேர குற்றச்சாட்டுகளுடனும் இணைத்து அரசியல் ரீதியாக பாதிக்க முயற்சி நடைபெறுவதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னையும் எனது சகோதரரையும் தொடர்புபடுத்தும் வகையில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், கட்டாய விசாரணை நடத்தப்படுவதாகவும் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    காவல்துறை

    "காவல்துறை விசாரணையில் பெறப்படும் வாக்குமூலங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அந்த வாக்குமூலங்களை உறுதிப்படுத்தும் வகையில் தனித்தனி சட்டப்பூர்வமான மற்றும் வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார்.

    நீதிமன்றம்

    தற்போது கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதாக குறிப்பிட்டுள்ள செந்தில் பாலாஜி, "நான் தலைமறைவாக செல்லவோ, நாட்டை விட்டு வெளியேறவோ வாய்ப்பில்லை. விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் ஆஜராக தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முன் ஜாமீன்

    எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Senthil Balaji's anticipatory bail plea alleges political targeting and attempts to link him with the Karur tragedy and horse-trading case.