முடியட்டும் சொல்றேன்.. பாதியில் வேண்டாம்.. குதிரை பேர வழக்கு குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்!

  • சென்னை: தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக விரைவில் விளக்கம் கொடுப்பேன் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விசாரணை பாதியோடு இருப்பதாக கூறிய செந்தில் பாலாஜி, முடிந்த பின் நிச்சயம் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் 'மேகலாயா புராஜக்ட்' என்ற பெயரில் தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டது. ஊத்தங்குரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக சில அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    இதனிடையே தவெக ஆட்சியை கவிழ்த்த புகாரில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக் குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன்பின் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். முன் ஜாமீன் நிபந்தனையில் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை கையெழுத்து போட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், செந்தில் பாலாஜியிடம் 50க்கும் அதிக கேள்விகள் கேட்கப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் குதிரை பேர வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரும் 2வது நாளாக விசாரணையில் பங்கேற்றனர். இந்த விசாரணையில் பங்கேற்க செந்தில் பாலாஜி வந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் விசாரணை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது செந்தில் பாலாஜி, விசாரணை பாதியில் இருக்கிறது.. முடியட்டும் சொல்றேன்.. கண்டிப்பாக சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

    செந்தில் பாலாஜியின் இந்த பதில் திமுக தொண்டர்களிடையே டிரெண்டாகி வருகிறது. ஏனென்றால் எந்தவித விமர்சனம் என்றாலும் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுப்பார். கரூர் விவகாரத்தின் போதும் கூட நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பல்வேறு கேள்விகளுக்கும் வீடியோவுடன் விளக்கம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Senthil Balaji: Will Issue Clarification Soon, DMK MLA Senthil Balaji Speaks Out on TVK MLA Horse-Trading Case Inquiry