சென்னை: "எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, சட்டப்படி நீதிமன்றம் சென்று அனைத்து வழக்குகளும் பொய்யான வழக்குகள் என்று நிரூபித்துக் காட்டுவோம்" என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தன்னிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், பேரம் பேசியதாகக் கூறப்படும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கு மாருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அதன்படி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "மக்கள் பணிகளில் கவனம் செலுத்தாமல் வழக்குகளை போடுவதில் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி அத்தனை வழக்குகளும் பொய்யானவை என்று நிரூபித்து காட்டுவோம். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை. எப்.ஐ.ஆரில் பெயர் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கு போட்டுள்ளது. இந்த வழக்கு நீண்டு செல்லாது" என்று கூறியுள்ளார்.