செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி!


  • சென்னை: சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் 23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளது.

    Advertisement

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை வழியாக இந்த ரயில்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அதிலும் ஆன்மீக நகரங்களில் ஒன்றாக இருக்க கூடிய திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே நேரடியாக இயக்கப்படுகிறது.

    Advertisement

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்

    இந்த ரயில், திருச்சி, மதுரை, நெல்லையை கவர் செய்து திருச்செந்தூர் செல்கிறது. இதனால் பயணிகள் கூட்டம் இதில் அலைமோதும். அதுபோக திருச்செந்தூர் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனால் இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் திருச்செந்தூர் கோயில் பண்டிகை நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும்.

    கூடுதலாக 5 பெட்டிகள் சேர்ப்பு

    தற்போது 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதுடன், முன்பதிவு காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகிறது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வேக்கு நீண்ட நாட்களாக கோரிக்க விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் கூடுதலாக 5 ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    வரும் 15 ஆம் தேதி முதல்..

    அதாவது 18 பெட்டிகளுடன் இயங்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 23 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (வண்டி எண் 20605)செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும், மறுமார்க்கத்தில் அதாவது வரும் 16 ஆம் தேதி முதல் திருச்செந்தூர் - சென்னை எழும்பூருக்கு (வண்டி எண் 20606) செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    ஏசி பெட்டிகள் எத்தனை?

    புதிதாக 2-வது வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் இரண்டு மற்றும் படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு என மொத்தம் 5 பெட்டிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் ரயிலின் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 18-ல் இருந்து 23 ஆக உயர்கிறது.

    கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு, முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 2-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 11, முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 23 பெட்டிகள் இடம்பெறும். இந்த மாற்றத்தால் சுமார் 350 பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்க முடியும். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் என ரயில்வே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    English Summary

    Senthur Express: Southern Railway has announced five additional coaches for the Senthur Express running between Chennai Egmore and Tiruchendur. The expansion, effective from June 15, will increase passenger capacity, reduce waiting lists, and improve travel convenience for devotees and regular passengers.