சென்னை: சட்டப்பேரவையில் தவெக அரசுதான் சிறுபான்மையினருக்கு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்குவதாக அமைச்சர் ஷாஜகான் சொன்னதுமே, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மெய்யநாதன் மற்றும் திமுகவினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அந்தவகையில் இன்றைய பேரவை நிகழ்வும் பெரும் கவனத்தை பெற்றுள்ளதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டன.
2 நாட்களுக்கு முன்பு, "இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என திமுகவினர் சட்டமன்றத்தில் 5 முறை பதிவு செய்ததாக" தவெக சட்டமன்ற உறுப்பினர் முன்ஸ்தபா (எ) மதார் பதுருதீன் குற்றம்சாட்டியிருந்தார்..
முஸ்தபாவின் இந்த கருத்துக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவையில் கூச்சல், எதிர்ப்பு குரல்கள். வாக்குவாதம் வெடித்தன.. திருவாரூர் திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. "இஸ்லாமியருக்கு 3.5% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு திமுக தான். தேவையில்லாத பதிவுகளை சட்டமன்றத்தில் பதிவு செய்யக்கூடாது" என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தவெகவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். "முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை விட்டவர் கலைஞர். உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார், சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார். வஃபு வாரிய சொத்துக்களை பராமரிக்க மானியம் வழங்கினார், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கினார்., உருது அகாடமியை தொடங்கினார், காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் வழங்கினார்" என்றெல்லாம் பட்டியலை வெளியிட்டு, திமுக பற்றி பேச தவெக எம்எல்ஏவுக்கு அருகதையே இல்லை என்று முரசொலியில் நேற்றைய தினம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முஸ்தபா 2 நாட்களுக்கு முன்பு பேசிய பேச்சுக்கு திமுக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.. அந்த கோபமே இன்னும் தணியாத நிலையில், இன்றைய தினம் மீண்டும் அதேபோனற பேச்சு இன்று சட்டப்பேரவையில் வெடித்துள்ளது. "சிறுபான்மையினருக்கு ஒரே அறிவிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவது தற்போதைய தவெக ஆட்சி தான்" என சட்டப்பேரவையில் அமைச்சர் ஷாஜகான் பேசினார். இதற்கு உடனே சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதிலளிக்கும்போது, "முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை செல்வதற்கு வசதியாக ஹஜ் இல்லம் கட்டுவதற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஹஜ் இல்லத்திற்காக ஒதுக்கிய ரூ.15 கோடியை, ரூ.40 கோடியாக உயர்த்தி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது திமுகதான்.. நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என நீங்கள் சொல்வது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது.. இப்படி சிறுபான்மையினருக்கான திமுக அரசு செய்ததையெல்லாம் மறந்துவிட்டு என்னமோ இப்போதைய தவெக அரசு தான் எல்லாமே செய்கிறது என்று தோற்றத்தை உருவாக்குவது நன்றி மறந்தது போலாகிவிடும்" என்று எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, அமைச்சர் ஷாஜகானுக்கு உரிய பதிலடி கொடுத்தார். இதை தொடர்ந்து திமுக தரப்பில் மெய்யநாதன் பேசும்போது, "இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டிய மண் தமிழ்நாடு. நிலைநாட்டிய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். இஸ்லாமிய மக்களுக்காக 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியவர் மறைந்த தலைவர் கலைஞர்" என்று ஷாஜகான் பேச்சுக்கு பதிலளித்தார்.. சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையேயான இந்த கருத்து மோதல்கள் ஜனநாயக விவாதங்களை மீறி பதற்றத்தையே ஏற்படுத்தி வருகின்றன.. இதுபோன்ற மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணான விவாதங்கள் அவையின் மாண்பைக் குலைப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.பூண்டி கலைவாணன் அதிரடி
முஸ்தபா பேசிய பேச்சு
தமிமுன் அன்சாரி - ஷாஜகான்