பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்!

  • சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். அவர் மட்டுமின்றி ஆணைய உறுப்பினர்களான சத்யமூர்த்தி , நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி (காவல்துறை) தலைவராக பதவி வகித்தவர் சங்கர் ஜிவால். இவர் கடந்த 2023 ஜூலை மாதம் முதல் 2025 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக செயல்பட்டார். அதன்பிறகு ஓய்வு பெற்றார்.

    Advertisement

    சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் இதுவரை தீயணைப்பு ஆணையம் இல்லாமல் இருந்தது. ஆனால் 2025 செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த ஆணையம் செயல்படும். அதன் தலைவராக சங்கர் ஜிவால் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் சங்கர் ஜிவாலுக்காக இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆணையம் என்பது மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை நவீனப்படுத்துவது, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தீயணபை்பு மற்றும் மீட்பு பணிகளின் கூடுதல் இயக்குநர் இந்த ஆணையத்தின் அலுவல் வழி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டது.

    Advertisement

    இந்த ஆணையத்தின் முதல் தலைவராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்த ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் அவர் இன்று தனது தலைவர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். சங்கர் ஜிவால் மட்டுமின்றி ஆணைய உறுப்பினர்களான சத்யமூர்த்தி , நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

    இந்த பொறுப்பில் சங்கர் ஜிவாலை, முந்தைய திமுக அரசு நியமனம் செய்தது. ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. இதற்கிடையே தான் தனக்கு மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவி வேண்டாம் என்று சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் அவரது ராஜினாமாவிற்கான உறுதியான காரணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    Advertisement

    சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் டிஜிபியாகும் முன்பு சென்னை மாநகர போலீஸ் ஆணையராக பணியாற்றினார். இவர் 1990 பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். இவர் உத்தரகாண்ட்டை சேர்ந்தவர். இவர் மன்னார்குடி உதவி எஸ்பியாக தமிழ்நாட்டில் பணியை தொடங்கினார்.

    சேலம் எஸ்பியாகவும், ஆளுநரின் ஏடிசியாகவும் பணியாற்றினார். அதன்பிறகு மத்திய பணிக்கு சென்றார். போதை கட்டுப்பாட்டு முகமையின் தெற்கு மண்டல இயக்குநராக பணியாற்றினார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவன் ஐஜியாக பணியாற்றினார். உளவுத்துறையில் செயல்பட்டார். இதுதவிர வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றினார்.

    Advertisement

    குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏடிஜிபி சிறப்பு அமலாக்க பிரிவு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு காவல் துறை தலைவராக பொறுப்பு வகித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Tamil Nadu DGP (Law and Order) Shankar Jiwal has resigned from the post of Head of the Tamil Nadu Fire Services. Along with him, Commission members Sathyamurthy, Namachivayam, and Ikram have also abruptly resigned.