குப்பையில் தூக்கி வீசப்பட்ட ரூ.10.9 கோடி லாட்டரி டிக்கெட்.. 2 நாட்களுக்குப் பின் நடந்த பேரதிசயம்!

  • சென்னை: இத்தாலியில் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் ஒரே நேரத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தான் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ரூ.10.9 கோடி பரிசு விழுந்ததை அறியாமல், அதை குப்பையில் தூக்கி வீசிய பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த டிக்கெட்டை மீட்டெடுத்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒரு சிறிய தவறால் நேர்ந்த அசம்பாவிதம்

    தெற்கு இத்தாலியில் உள்ள பிடோண்டோ நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி விளையாடும் பழக்கம் கொண்டவர். சமீபத்தில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டின் எண்களைச் சரிபார்க்க உள்ளூர் கடைகளுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஸ்கேனரில் டிக்கெட்டைச் சோதித்தபோது, திரையில் பணம் செலுத்த முடியாது (Non-payable) என்ற மெசேஜ் தோன்றியது.

    Advertisement

    இதைக் கண்ட அப்பெண், தன் டிக்கெட்டுக்கு எந்தப் பரிசும் விழவில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டார். விரக்தியில், அந்த லாட்டரி டிக்கெட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியிலேயே தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்.

    ஆனால், உண்மையான காரணம் வேறு. இத்தாலி லாட்டரி விதிகளின்படி, ஒரு டிக்கெட்டிற்கு வழங்கப்படும் பரிசுத் தொகை மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில், சிறிய கடைகளில் அந்தத் தொகையை உடனடியாகப் ரொக்கமாக வழங்க முடியாது. அதையே அந்த இயந்திரம் Non-payable என்று காண்பித்துள்ளது.

    குடும்பத்தினர் கொடுத்த அதிர்ச்சித் தகவல்

    வீட்டிற்கு வந்த அந்தப் பெண்ணிடம், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் அன்றைய லாட்டரி முடிவுகளைக் காட்டி ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். அப்பெண் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் 2, 4, 8, 10 மற்றும் 51 ஆகிய எண்களுக்குத்தான் அந்த வாரத்தின் மிகப்பெரிய முதல் பரிசான €1 மில்லியன்.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10.9 கோடி கிடைத்துள்ளது!

    Advertisement

    தனக்கு மிகவும் நெருங்கிய, அன்பிற்குரிய காதலனின் நினைவாக அப்பெண் எப்போதும் இந்த எண்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து விளையாடி வந்துள்ளார். பரிசுத் தொகை கிடைத்த மகிழ்ச்சியை விட, அந்த டிக்கெட்டை கடையில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் அவர் உறைந்து போனார்.

    உடனடியாக அந்தப் பெண் பதறியடித்துக்கொண்டு கடைக்கு ஓடினார். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடையிலிருந்த குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை லாரியில் ஏற்றப்பட்டுச் சென்றுவிட்டது.

    குப்பைக் கிடங்கில் தொடங்கிய தேடுதல் வேட்டை

    ரூ.10.9 கோடியை இழக்க மனமில்லாத அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும், SANB என்ற தூய்மைப் பணி மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்ட்டோ நிகோலா தோஸ்கானோவை (Roberto Nicola Toscano) அணுகி உதவி கோரினர்.

    Advertisement

    இதுகுறித்துத் தோஸ்கானோ கூறுகையில், அந்த டிக்கெட் ஏற்கனவே குப்பை லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டதால், அது கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் நாங்கள் தேடத் தொடங்கினோம். ஆனால் அவர்களின் நிலைமையைப் பார்த்து உதவ முடிவு செய்தோம் என்றார்.

    தோஸ்கானோ மற்றும் அவரது குழுவினர் அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குப்பை லாரியைக் கண்டறிந்து உடனடியாக நிறுத்தினர். அபாயகரமான கழிவுகள் கலந்திருக்கும் அபாயம் இருந்ததால், அந்த லாரி சிறப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட கழிவு சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் ஒரு நாளுக்கும் மேலாக லாரியில் இருந்த அனைத்துக் குப்பைகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர். பல பழைய டிக்கெட்டுகள் மற்றும் காகிதக் கழிவுகளுக்கு இடையே, இறுதியாக அவர்கள் தேடிய அந்த அதிர்ஷ்ட டிக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

    Advertisement

    ஆச்சரியப்படும் விதமாக, இவ்வளவு குப்பைகளுக்கு நடுவிலும் அந்த டிக்கெட் எந்தச் சேதமும் அடையாமல் முழுமையாக அப்படியே இருந்தது, என்று தோஸ்கானோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    டிக்கெட் கிடைத்தவுடன் தோஸ்கானோ தொலைபேசியில் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார். அதைக் கேட்ட அந்தப் பெண் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.

    இருப்பினும், இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒரு நிபந்தனை இருந்தது. SANB ஒரு அரசு சார்ந்த பொது நிறுவனம் என்பதால், குப்பைகளில் டிக்கெட்டைத் தேடப் பயன்படுத்தப்பட்ட கூடுதல் செலவுகளை அந்தப் பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில், அந்தச் செலவுகளை ஏற்க அப்பெண் உடனடியாகச் சம்மதித்தார். அந்த பெண்ணிற்கு தற்போது அந்த 10 கோடி ரூபாய் பணமும் வழங்கப்பட்டு உள்ளது.

    English Summary

    She Threw Away a 1 Million Winning Lottery Ticket in Garbage: What Happened next?