துணை நடிகர் பிரதீப் ராஜ் கொலை: “விநாயகர் சிலை.. பண தகராறு”.. கொலையாளி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

  • சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக துணை நடிகர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த பிறகு மர்ம கும்பலால் அவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    சென்னை திருவொற்றியூர் ரயில் நிலைய சாலையில் டிபன் கடை நடத்திவரும் நவநீதம் என்பவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் அவரது மருமகன் சதீஸ்குமார் ஆகியோர் அவசர தேவைகளுக்காக சிறுகச் சிறுக ரூ.9.5 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி மாலை நவநீதம், ராணியிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராணி தரப்பினர் நவநீதத்தை அவதூறாக பேசி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்த நவநீதம் வீட்டிலிருந்த தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். அவரை அவரது மகன் நவீன் என்கிற நாராயணன் மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    நவநீதத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 26ஆம் தேதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராணியின் மகன் பிரதீப் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்றைய தினமே நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    இந்த சம்பவத்துக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பழிதீர்க்கும் நோக்கத்துடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரதீப் ராஜ் தன்னைத் தாக்க வருவதாக நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நவீன் மற்றும் பிரதீப் ராஜ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் மீண்டும் பிரச்சனையில் ஈடுபடக்கூடாது என காவல் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

    விசாரணையின்போது நவீனை காவல் நிலையத்தில் வைத்தே பிரதீப் ராஜ் திட்டியதாகவும், அதனால் காவல் ஆய்வாளர் அவரை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீசிலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே நவீன் தரப்பினர் அரிசி கடத்தல் மற்றும் மாவா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ராணி அளித்த புகாரின் பேரிலும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புதன்கிழமை இரவு மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நவநீதம் தரப்பைச் சேர்ந்த நாராயணன் என்கிற நவீன் அவரது கூட்டாளிகளான ஹரிகிருஷ்ணன், லோகேஷ், ஜாபர் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பிரதீப் ராஜை வழிமறித்துள்ளனர்.

    அந்த கும்பல் பிரதீப் ராஜை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருவொற்றியூர் போலீசார், பிரதீப் ராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நாராயணன் என்கிற நவீன், ஹரிகிருஷ்ணன், லோகேஷ் மற்றும் ஜாபர் ஆகிய 4 பேரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கொலைக்குப் பின்னணியில் இருக்கும் மற்ற காரணங்களும் தெரியவந்துள்ளன. நவநீதம் நடத்தி வரும் டிபன் கடைக்கு அருகில் ஆண்டுதோறும் பிரதீப்ராஜ் ஏற்பாட்டில் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை வைப்பது வழக்கம். இதனால், நவநீதம் கடையில் வியாபாரம் பாதித்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் மாற்றி மாற்றி புகார் அளித்த நிலையில் போலீசார் அழைத்து விசாரித்து அனுப்பி உள்ளனர். அதன்பிறகு தான் பிரதீப்ராஜ், தன்னுடைய உயிருக்கு ஆபத்து எனக் கூறி பேட்டி அளித்திருந்தார். இந்தச் சூழலில்தான் அவரை 4 பேர் கொலை செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "எனது தாயார் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே பிரதீப் ராஜும், அவரது நண்பர்களும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பண தகராறு உள்ளிட்ட முன்விரோதம் எங்களுக்குள் இருந்து வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்தோம்" என நவீன் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    The brutal hacking to death of a supporting actor by a mysterious gang—after he had lodged a police complaint citing a threat to his life—has caused a sensation. Details regarding the background of this incident have now emerged.