சென்னை: தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற ஐடி ஊழியரை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிடிபட்ட ஐ.டி ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி (24). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் அவரது வேலையை முடித்துவிட்டு, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து ஏறி, தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடந்து, அவரது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வது வழக்கமாகும். அப்படி, அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கிய புவனேஷ்வரி, நடைபாதை வழியாக சென்றுள்ளார். அப்போது, புவனேஷ்வரி தனது முதல் மாத ஊதியத்தில் லட்டு வாங்கி, நடைபாதையில் இருந்த ஆதரவற்றவர்களுக்கு கொடுத்துள்ளார். அப்படி ஒருவருக்கு கொடுக்கும்போது, அருகில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை புவனேஷ்வரியின் முகத்தில் அடித்துள்ளார். இதனால், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு புவனேஷ்வரி துடித்துக்கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் செயினை அந்த நபர் பறிக்க முயன்றுள்ளார். அப்போது புவனேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். அதைக் கேட்ட அருகில் இருந்த ஆதரவற்றவர்கள், செயின் பறிக்க முயன்றவரை பிடித்து, அந்த வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த தாம்பரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், பிடிபட்ட நபரை தாம்பரம் குற்றப்பிரிவு காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது குப்புசாமி (46) என்பது தெரியவந்துள்ளது. அவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்த குப்புசாமி, ஆன்லைன் டிரேடிங் மூலம் பல லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், பம்மலில் இருந்த தனது சொந்த வீட்டை 60 லட்சம் ரூபாய்க்கு விற்று கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். ஆனால், வீட்டை விற்ற பணத்தை கடன்காரர்களுக்கு கொடுக்காமல், மீண்டும் அந்த பணத்தையும் ஆன்லைன் டிரேடிங்கில் செலவிட்டு மொத்தமாக இழந்துள்ளார். இதனால், பம்மலில் இருந்து மேல்மருவத்தூருக்கு குடும்பத்தினருடன் சென்று குப்புசாமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த குப்புசாமி, பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக தாம்பரம் சானடோரியம் வந்தபோது, கடன்காரர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுபோன்ற சூழலில், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு கடனை செலுத்தி விடலாம் என்று எண்ணி, அதற்காக பெப்பர் ஸ்பிரே ஒன்றை வாங்கி வைத்துள்ளார். இதையடுத்து, புவனேஷ்வரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது, குப்புசாமி பிடிபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் குற்றப்பிரிவு காவல்துறையினர், குப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த ஐ.டி ஊழியர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.