நெல்லை: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு கொலைகள் அரங்கேறியுள்ளன. நெல்லை வள்ளியூர் அருகே வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் பஞ்சாயத்து தலைவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று தென்காசியில் கடையம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 68). இவர் வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர். இதே பகுதியை சேர்ந்த தொழிலாளி இசக்கியப்பன். இவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது இவரது வீட்டுக்கு மட்டும் தண்ணீர் வரவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் நேற்று மாலை பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் வீட்டுக்கு சென்று இது பற்றி பேசினார். அப்போது இவர்கள் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த இசக்கியப்பன் அங்கு கிடந்த செங்கலை எடுத்து மகாராஜன் மீது வீசினார். இதில் அவரது தலையில் செங்கல் பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இசக்கியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் மகாராஜனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து வந்து மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இசக்கியப்பனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்று தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் வசித்து வந்த சந்தான பாலமுருகன் என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் மர்ம கும்பலால் தலை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொத்தனாரான பாலமுருகனுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து பதறினர். ஊர் மக்கள் ஓடி வந்ததை பார்த்தது அந்த கும்பலினர் தாங்கள் கொண்டு வந்த பைக்கில் ஒன்றை விட்டுவிட்டு இன்னொரு பைக்கை எடுத்துவிட்டு தப்பினர். ஆழ்வார்குறிச்சி மற்றும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம கும்பல் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். எதற்காக தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார் என்றும், முன்விரோதம் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை, தென்காசியில் தொடர் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.