4 நாட்கள் டெண்டர்.. தவெக அரசு மீது தொடரும் டெண்டர் சர்ச்சைகள்.. சொதப்பும் விஜய்! பின்னணி என்ன?

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் அரசு பொறுப்பேற்றது முதலே நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் தீவிரமாக எழுந்து வருகின்றன. தேர்தல் களத்தில் வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முதன்மை வாக்குறுதிகளாக முன்வைத்து அதிகாரத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே நிர்வாக ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு துறைகளில் வெளியிடப்பட்டு வரும் அரசு டெண்டர்களில் சட்ட விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுவதாகக் கிளம்பியுள்ள புகார்கள் அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

    Advertisement

    விதிமுறைகளை மீறும் அவசரக் காலக்கெடு

    தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் அதன் துணை விதிகளின்படி, அரசின் எந்தவொரு திட்டப் பணிக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரும்போது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்ப குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை ஒப்பந்ததாரர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் காலங்கள் அல்லது தீவிர அவசரத் தேவைகள் போன்ற விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே, அதற்குரிய எழுத்துப்பூர்வ காரணங்களைப் பதிவு செய்து இந்நாட்களைக் குறைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.

    ஆனால், தவெக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள வாரச்சந்தை ஏலம் மற்றும் சமூக நலக்கூடம் தொடர்பான டெண்டர்களில் இந்த விதிகள் அப்பட்டமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வாரச்சந்தை பராமரிப்பு மற்றும் வரிவசூல் தொடர்பான டெண்டருக்கு வெறும் 4 நாள்கள் மட்டுமே விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, புதிய சமூக நலக்கூடம் அமைக்கும் கட்டுமானப் பணி தொடர்பான டெண்டருக்கு 5 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இவ்வளவு குறுகிய அவகாசத்தில் பொதுவெளியில் உள்ள மற்ற ஒப்பந்ததாரர்கள் ஆவணங்களைத் தயார் செய்து, முன்வைப்புத் தொகையைச் செலுத்தி டெண்டர் நடைமுறைகளில் பங்கேற்பது நடைமுறையில் இயலாத ஒன்று. குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அவர்களுக்கு மட்டுமே சாதகமாகப் பணிகளை முடித்துக்கொடுக்கும் உள்நோக்கத்துடன்தான் இந்த மின்னல் வேக டெண்டர்கள் கோரப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை ஒப்பந்ததாரர் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் முன்வைத்துள்ளன.

    முதலமைச்சர் கட்டுப்பாட்டுத் துறையில் சர்ச்சை

    பேரூராட்சி டெண்டர்கள் ஒருபுறமிருக்க, முதலமைச்சர் வசமுள்ள துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளிலேயே வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையின் 10-வது தளத்தில், புதிய முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரத்யேக அறைகளை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக சுமார் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அரசின் அதிகாரப்பூர்வ இ-டெண்டர் இணையதளத்தில் (e-procurement portal) விபரங்களை முறையாகவும் உடனடியாகவும் பதிவேற்றாமல் இழுத்தடித்தது, ஆன்லைன் ஆவணங்களில் திட்ட மதிப்பீடான ரூ.5.5 கோடி என்ற தொகையைக் குறிப்பிடாமல் தவிர்த்தது என அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பும் நடைமுறைகள் அரங்கேறின. மேலும், டெண்டர் கோரப்பட்டு அது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு முன்பாகவே, நாமக்கல் மாளிகையில் அலுவலகச் சீரமைப்புப் பணிகள் களத்தில் தொடங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டது. டெண்டர் இறுதி செய்வதற்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றால், இது வெறும் கண்துடைப்பு நடைமுறையா? என்ற கேள்விகள் அரசு நிர்வாகத்தை நோக்கி எழுந்துள்ளன.

    Advertisement

    *நெடுஞ்சாலைத் துறையில் செட்டிங் குற்றச்சாட்டுகள்

    இவை தவிர, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உட்கட்டமைப்புப் பணிகளுக்கான டெண்டர்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சமூக நல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன. சட்டப்படி அனைத்துத் தகுதியான ஒப்பந்ததாரர்களும் சமமாகப் போட்டியிடும் வகையில் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி முறையே பின்பற்றப்பட வேண்டும். ஆனால், பல முக்கியப் பணிகளில் 'லிமிடெட் டெண்டர்' முறையைப் புகுத்தி, போட்டியைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

    குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கமான சிண்டிகேட்டுகள் மட்டுமே பங்கேற்கும் வகையில், டெண்டர் நிபந்தனைகளில் தேவையற்ற கடுமையான விதிகளைச் சேர்த்து செட்டிங் டெண்டர்களாக மாற்றப்படுவதாகவும், இதன் மூலம் போட்டி ஒப்பந்தப்புள்ளிகள் உருவாவது திட்டமிட்டுத் தடுக்கப்பட்டு, அரசு கஜானாவிற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு

    அதிகாரத்திற்கு வந்த முதல் சில மாதங்களிலேயே பேரூராட்சி விவகாரம், முதலமைச்சர் அலுவலகச் சீரமைப்பு, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் எனத் தொடர்ச்சியாக டெண்டர் விதிமீறல் புகார்கள் அணிவகுத்து நிற்பது, விஜய் முன்வைத்த நேர்மையான நிர்வாகம் என்ற முழக்கத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும், பொது நிதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தவெக அரசு உடனடி விசாரணையை மேற்கொண்டு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    Short deadlines to setting tenders: Rising controversies over TVK govt contracts