சென்னை: தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (StartupTN / TANSIM) தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரனை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எனினும், இந்த நியமனம் தொழில்முனைவோர் வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
மாநிலத்தின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்முனைவோர் சூழலை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் உருவாக்கப்பட்ட ஒரு முதன்மை தொழில்நுட்பக் கட்டமைப்புக்கு, துறைசார்ந்த அனுபவமிக்க நிபுணரை நியமிப்பதற்குப் பதிலாக அரசியல் கட்சி பின்னணி கொண்ட ஒருவரை நியமித்திருப்பது தவறான முன்னுதாரணம் என்ற வாதம் வலுத்து வருகிறது. ஸ்டார்ட்டப் டிஎன் தலைவர் பதவிக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் விண்ணப்பித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட விதம் குறித்து எவ்வித வெளிப்படையான அல்லது பொதுவான தகுதிப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. தேர்வுக்குழு யார், நேர்காணல் அல்லது தேர்வு முறை எவ்வாறு நடந்தது போன்ற எந்த விவரங்களும் பொதுவெளியில் அறிவிக்கப்படாமல், திடீரென ஒரு அரசியல்வாதியை இப்பதவியில் அமர்த்தியிருப்பது வெளிப்படைத்தன்மை மீதான மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னாள் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராகவும், 2024 மக்களவைத் தேர்தலில் கோவையில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவருமான சிங்கை ராமச்சந்திரன், அண்மையில்தான் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் தவெக கட்சியில் இணைந்தார். கட்சி மாறிய சில வாரங்களிலேயே இவருக்கு மாநில அளவிலான முக்கிய அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பதவி தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதா அல்லது எதிர்க்கட்சி முகாமிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட அரசியல் பரிசா என்ற அதிருப்தி தொழில்முனைவோர் சமூகத்தில் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கவும் வேண்டிய ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, முழுநேர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஒருவரைத் தலைவராக்குவது நிர்வாகத் திறனை நீர்த்துப்போகச் செய்யும் என்ற கருத்தும் நிலவுகிறது. அரசு நிறுவனங்களின் உயர் பதவிகளில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அரசியல் நியமனங்கள் செய்யப்படும்போது, அவை பெரும்பாலும் சட்டச் சிக்கல்களில் சிக்குவது வழக்கம். இந்த நியமனத்தின் தேர்வு வரம்புகள், நேர்காணல் குறிப்புகள் மற்றும் அரசாணை நடைமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரப்பட்டால், இது எளிதில் நீதிமன்ற வழக்காக மாறக்கூடும் என்று சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் சார்ந்த அமைப்புகளில் அரசியல் சாயம் பூசப்படுவது, கொள்கை முடிவுகளிலும் நிதி ஒதுக்கீடுகளிலும் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பல திறமையான விண்ணப்பதாரர்களை ஒதுக்கிவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு, தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் சூழலுக்கு ஆரோக்கியமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.500 விண்ணப்பங்கள்... வெளிப்படைத்தன்மை எங்கே?
கள நிபுணத்துவமா... அரசியல் பரிசா?
நீதிமன்றப் பார்வைக்குச் செல்லுமா?