திருமாவளவன் பரிந்துரையால் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! சிந்தனைச் செல்வன் ட்வீட்

  • சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் பரிந்துரையால்தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என திருத்தியமைக்கப்பட்டது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகநீதி வெற்றிக்கூட்டணி' என்று முன்மொழியப்பட்ட பெயர், நமது தலைவர் எழுச்சித்தமிழரின் அறிவார்ந்த ஆளுமையால் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி' என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மதச்சார்பற்ற தமிழ்தேசியம்....
    சமூக நீதிக்கான தமிழ் தேசியம் என தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுப்பிரகடனத்தில் தலைவர் பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன்.

    மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சாதியவாத சக்திகளே தமிழ்சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் நம் தலைவர்.

    விடுதலைச்சிறுத்தைகளின்
    உத்தி மாறலாம்.

    இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை. ! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற தவெக பெரும்பான்மை பெறாத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. இதில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் உள்ளன.

    Advertisement

    தவெகவுக்கு மதிமுகவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனிடையே தவெக கூட்டணியில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.

    அந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. வெளியில் இருந்து ஆதரவு தருவதால் இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட்களும் மார்க்சிஸ்ட்களும் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்தது.

    Advertisement

    இந்த கூட்டத்திலும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்கள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகியவை கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்பி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ எம்பி, ஐயூஎம்எல் காதர்மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விசிக திருமாவளவன், ரவிக்குமார் எம்பி, சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விஜய்யும் பட்டு வேட்டி சட்டையில் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. தவெக தலைமையிலான கூட்டணிக்கு "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி" என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணித் தலைவராக முதல்வர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்க முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திருமாவளவன்தான் மதச்சார்பற்ற என்ற வார்த்தையை சேர்த்தால் நன்றாக இருக்கும் என பரிந்துரைத்தாராம். அவரது அறிவுறுத்தலின் பேரில் அந்த வார்த்தை கூட்டணி பெயரின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் சிந்தனைச் செல்வன் பெருமிதம் பொங்க தெரிவித்திருந்தார்.

    English Summary

    VCK MLA Sinthanai Selvan proudly says that his party President Thirumavalavan suggested to add seular to Social Justice victory alliance name.