SIR மூலம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக வெற்றி - ஆய்வில் வெளியான ஷாக் தகவல்

  • சென்னை: SIR காரணமாக தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தவெக வெற்றி பெற்றுள்ளது 'தி இந்து' பிசினஸ்லைன் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக அதிகளவில் வென்றுள்ளது. அதேசமயம், அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 80,000 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெற்றுள்ளது.

    Advertisement

    எஸ்.ஐ.ஆர் தாக்கம்

    நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், புதிய கட்சியான தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கையால், தமிழ்நாட்டில் சுமார் 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

    தமிழகத்தில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.

    Advertisement

    வாக்காளர்கள் நீக்கமும் தவெக வெற்றியும்

    இந்தச் சூழலில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்ததையும், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் நுணுக்கமாக ஒப்பிட்டு, 'தி இந்து பிசினஸ்லைன்' பத்திரிகை ஆய்வு மேற்கொண்டு, சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அதாவது, எஸ்.ஐ.ஆர் மூலம் குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக அதிகளவில் வென்றுள்ளது. அதேசமயம், அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

    தவெக வென்ற இடங்கள்

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 19 தொகுதிகளில் 10,000 வாக்காளர்கள் வரையிலான குறைவான வாக்காளர் நீக்கம் இருந்தது. இவற்றில், தவெக 2 இடங்களையும், திமுக 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், மற்ற கட்சிகள் 4 இடங்களையும் வென்றன.

    Advertisement

    80 சட்டமன்றத் தொகுதிகளில் 10,000 முதல் 20,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவற்றில், தவெக 22 தொகுதிகளையும், திமுக 20 தொகுதிகளையும், அதிமுக 24 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 14 தொகுதிகளையும் வென்றன.

    20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள்

    66 சட்டமன்றத் தொகுதிகளில் 20,000 முதல் 30,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இவற்றில், தவெக 32 இடங்களையும், திமுக 21 இடங்களையும், அதிமுக 11 இடங்களையும், மற்றவை 2 இடங்களையும் வென்றன.

    30,000 முதல் 50,000 வரையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதிகளில், தவெக 24 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    Advertisement

    அள்ளிய தவெக

    50,000 முதல் 80,000 வாக்காளர்கள் வரையிலான வாக்குகள் நீக்கப்பட்ட தொகுதிகள் 22. அவற்றில் 18 தொகுதிகளில் தவெகவும், 3 தொகுதிகளில் திமுகவும், 1 தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றன.

    80,000 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது. அதாவது, வாக்காளர்கள் நீக்கம் அதிகமாக அதிகமாக, அந்த தொகுதிகளில் எல்லாம் தவெகவின் வெற்றி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 69 இடங்களில் தவெக 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக வெறும் 11 இடங்களிலும், அதிமுக வெறும் 6 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

    English Summary

    A study has revealed shocking information suggesting that the Tamil Nadu Assembly election results were changed due to SIR. An analysis indicates that TVK won in constituencies where a large number of voters had been removed from the electoral rolls.