சென்னை: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (ஜூலை 26) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), த/பெ. ரவீந்திரன், ராமச்சந்திரன் (வயது 10), த/பெ. ரவீந்திரன், இன்னாசிமுத்து (வயது 44), த/பெ. சிங்கராஜ் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த திரு. பாண்டித்துரை (வயது 35), த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வு செய்து உரிய நடவ எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.