ஸ்மார்ட் மீட்டர் டெண்டர்.. வீட்டு கரண்ட் பில் இனி எப்படி வரும்? 200 யூனிட் இலவச மின்சாரம் என்னாகும்?

  • சென்னை: மின் கட்டணம் வீட்டில் இனி எப்படி கணக்கிடப்படும் என்ற கேள்வியை எழுப்பும் வகையில், தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இந்த மீட்டர் வந்தால் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட முடியும் என்றாலும், 200 யூனிட் இலவச மின்சாரம் முதல் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் வரை இப்போது கிடைக்கும் சலுகைகள் என்னாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது..!!

    Advertisement

    ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியமாக கணக்கிடுவதுடன், அந்த தகவல்களை தானாக பதிவு செய்யும் நவீன மின் மீட்டர்தான் ஸ்மார்ட் மீட்டர்.. வழக்கமான மீட்டரைப் போல நேரில் வந்து கணக்கெடுக்கும் முறைக்கு மாற்றாக, தொழில்நுட்ப உதவியுடன் மின் பயன்பாட்டை கண்காணிக்க இது உதவும்.

    Advertisement

    ஸ்மார்ட் மீட்டர் ரீடிங் வசதி

    இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் ரீடிங் எடுக்கும் வசதி மேற்கொள்ளப்பட்டால், மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட முடியும். மின் கணக்கீட்டில் ஏற்படும் தவறுகளை குறைக்கலாம்.. அதேபோல் மின் திருட்டு, மின் இழப்பு போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும்.. முக்கியமாக, முன்கூட்டியே பணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் முறையும் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.

    அதனால்தான், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோரியுள்ளது. சென்னை தெற்கு 1 மற்றும் 2 மின்வட்டங்களில் அரசு கட்டிடங்கள், விவசாய இணைப்புகள் மற்றும் குடிசை இணைப்புகளைத் தவிர்த்து குறைந்த மின்னழுத்த நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.

    Advertisement

    நகரங்களில் விரிவாக்கம்

    சென்னையுடன் இந்த திட்டம் நின்றுவிடவில்லை.. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. இதற்கு காரணம், இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம், மின்வாரியத்தின் பணிகள் மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்களிடம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.. மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், மத்திய அரசு மாநிலங்களை ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வலியுறுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    200 யூனிட் இலவச மின்சாரம்

    அதனால் இப்போது கிடைக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம், சிறு-குறு தொழில்களுக்கான மானியங்கள், கைத்தறி மற்றும் நெசவு தொழிலுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் பாதிக்கப்படலாம் என்பதும் அரசியல் கட்சிகளின் அச்சமாக உள்ளது.

    அதுமட்டுமல்ல, கமர்ஷியல் நிறுவனங்களுக்கிருக்கும், பீக் ஹவர்ஸ் அதாவது மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையானது, எதிர்காலத்தில் வீட்டு மின் நுகர்வோருக்கும் வரலாம்... அதனால்தான் இந்த டெண்டர் முறைக்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    அதுபோலவே, மின்வாரிய தொழிற்சங்கங்களும் ஊழியர் அமைப்புகளும் இந்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.. ஏற்கனவே மின்வாரியத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரந்தரமாக நிரப்பாமல் மின் கணக்கீடு உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்தால் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று கூறுகின்றன.

    Advertisement

    டெண்டர் ஏன்? கடும் எதிர்ப்பு

    மேலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதால் நிதிச்சுமையில் உள்ள மின்வாரியத்திற்கு கூடுதல் சுமை ஏற்படும்.. அப்படியிருக்கும்போது தனியார் நிறுவனம் மின் கணக்கீட்டில் தவறு செய்தால் யார் பொறுப்பு ஏற்பது? நுகர்வோரின் மின் பயன்பாடு தொடர்பான தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும்? தொழிற்சங்கங்களின் கேள்வியாக உள்ளது.

    ஒருபக்கம் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடவும், மின் திருட்டு மற்றும் இழப்பை கட்டுப்படுத்தவும் ஸ்மார்ட் மீட்டர் உதவும் என மின்வாரியம் நம்பிக்கை தருகிறது.. ஆனால் இன்னொருபக்கம், இலவச மின்சாரம், கட்டண நடைமுறை, தனியார் நிறுவனங்களின் பங்கு, ஊழியர்களின் வேலைவாய்ப்பு என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன..

    Advertisement

    அதனால் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அடுத்தகட்டத்தில் எப்படி செயல்படுத்தப்படும் என்பதே இப்போது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது...!!!

    English Summary

    Smart Meter Tender Benefits.. How Will Home Electricity Bills Change? What Happens to 200 Units Free Power?