சென்னை: 100 நாட்களுக்கு பிறகுதான் முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாகி சிரிக்கிறார்.. அந்த இறுக்கம் தளரவே 100 நாட்கள் ஆகியிருக்கிறது. சட்டமன்றம் என்பது சபை நாகரிகத்தை பேண வேண்டிய இடம். அங்கு வரம்பு மீறி அல்லது அநாகரிகமாக பேசுவதைக் கண்டிக்காமல், பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவது போல் பேசக் கூடாது" என்று பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.
Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், "தமிழக வெற்றி கழகத்தில் "ஆளுமைகள்" இல்லை, வெறும் "ஆட்களே" இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து உரிய பதவிகளில் அமர்த்தும் அறிவும் இல்லை.
சினிமா தயாரிப்பாளர்களுக்கு கோயில் அறங்காவலர் குழுவில் இடம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? கோயில் என்பது வெறும் பக்தி சார்ந்த இடம் மட்டும் கிடையாது.. அது ஏழைகளுக்கு உதவி செய்யும் சமூகக் கூடம். அதை நிர்வகிக்க சமூக அக்கறையும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள்தான் தேவை. சினிமா தயாரிப்பாளர்களுக்கு கலைமாமணி விருது குழுவிலோ அல்லது இயலிசை நாடக மன்றத்திலோ பதவி வழங்கலாம். ஆனால், கோயில் நிர்வாகத்திற்கும் பாடகர்களுக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு சென்னை நூலக ஆணைக் குழுத் தலைவராகப் பதவி வழங்கப்பட்டது, ஏனென்றால் அவருக்கு புத்தகங்கள் மற்றும் இதழியல் சார்ந்த துறை அறிவு இருந்தது. கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ராஜ்மோகனை மீண்டும் தொகுப்பாளராக பயன்படுத்துவது, அந்த மாண்புமிகு பதவியை அவமதிக்கும் செயலாகும். கட்சி நிர்வாகத்தில் யாருக்கு எந்தப் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைத் தெளிவே அவர்களிடம் இல்லை. சட்டமன்றத்தை பொறுத்தவரை, அரசின் தரவுகளுடன் வாதிடக்கூடிய ஆளுமைகள் அவர்களிடம் இல்லை. சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பதிவேற்றுவதற்காக மட்டுமே அவர்கள் தயாராகி வருகிறார்கள். இணையதளம் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வழியே தரவுகள் எளிதாகக் கிடைக்கும் இந்த காலகட்டத்திலும் கூட, தகவல்களை சொல்வதில் பதற்றமடைகிறார்கள். 100 நாட்களுக்கு பிறகுதான் முதலமைச்சரே சட்டமன்றத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாகி சிரிக்கிறார்.. அந்த இறுக்கம் தளரவே 100 நாட்கள் ஆகியிருக்கிறது. சட்டமன்றம் என்பது சபை நாகரிகத்தை பேண வேண்டிய இடம். அங்கு வரம்பு மீறி அல்லது அநாகரிகமாக பேசுவதைக் கண்டிக்காமல், பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவது போல் பேசக் கூடாது. பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்தை முறைகேடு செய்ய முயன்றதில், உயர் அதிகாரிகளின் ஒப்புதலும் அரசியல்வாதிகளின் தயவும் நிச்சயமாக இருக்கும். கொடநாடு வழக்கிலும் இதுபோலவே சாட்சியங்கள் அடுத்தடுத்து விபத்துகளில் உயிரிழந்ததால் வழக்கு முடங்கியது. அதேபோல் இந்த வழக்கிலும் உண்மைகளை மூடிமறைக்கச் சாட்சியங்கள் கலைக்கப்படுகிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். நடிகர் சரத்குமார் பேசும் "நாட்டாமை குடும்பம் என்ற கருத்து மிகவும் பிற்போக்கானது. கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சாதியின் கவுரவத்தைக் காப்பாற்றவும், நீதியை மறுக்கவும் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்துதான் நாட்டாமை முறை... அது சட்டத்திற்கு புறம்பானது.. அதனால் "நாட்டாமை குடும்பம்" என்று தங்களை பெருமையாகக் கூறிக்கொள்வது, நாங்கள் சட்ட விரோதிகள் எனத் தாங்களே ஒப்புக்கொள்வதற்கு சமம். தன்னை மட்டும் உயர்வாகக் கருதிக்கொள்வது மற்றவர்களைத் தாழ்வாகக் காட்டுவதற்கே வழிவகுக்கும் என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய "பத்தினி வசிக்கும் வீடு" என்ற உதாரணமே பொருத்தமானது. "150 ஆண்டுகள் வாழ்வேன்" என்று பேசுவதும், கட்சியை விற்றுவிட்டதாக கூறுவதும் சரத்குமார் அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதையே காட்டுகிறது. ஆணவப் படுகொலைகளுக்கும் சாதிய கொடுமைகளுக்கும் துணைபோன நாட்டாமை முறையை இந்த காலத்திலும் பெருமையாகப் பேசுவது நாகரிக சமூகத்திற்கு அவமானகரமானது." என்றெல்லாம் காட்டமாக விமர்சித்துள்ளார்.அறங்காவலர் குழுவில் தயாரிப்பாளர்கள்
ஸ்மைல் செய்ய 100 நாட்கள்
பழனி விவகாரம்
நாட்டாமை குடும்பம்