சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே கோவூரில், மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேனில் திடீரென தீப்பற்றியது. ஓட்டுநர் அவசர அவசரமாக மாணவர்களைக் கீழே இறக்கியதால், அவர்கள் கணநேரத்தில் உயிர்தப்பினார்கள். கோவூரில் வாகனங்களுக்குக் கேஸ் நிரப்பும் பங்க் எதிரே தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்த நிலையில், பங்க் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர். பின்னர் வேறு வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரியாக ஐந்து நாட்களுக்கு முன்பு, சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் தாண்டி மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கினால் கைவேலி பேருந்து நிறுத்தம் வரும். அந்த இடம் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், தாம்பரம், கீழ்க்கட்டளை போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல முக்கியமான சந்திப்பாகும். அன்று ஒரு தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன், வழக்கமான பராமரிப்புப் பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாலை வேளையில் வாகனம் சென்றபோது, வேனின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை வேகமாக வெளியேறியது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாக வேனைச் சாலையோரமாக நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி ஓடினார். அடுத்த சில நிமிடங்களில் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ, மளமளவெனப் பரவி வேன் முழுவதும் பற்றி எரிந்தது. சுற்றிலும் யாரும் செல்ல முடியாத அளவிற்கு வாகனம் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதுவரை அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் இயல்பு நிலை திரும்ப நீண்ட நேரம் ஆனது. இந்த விபத்து வேனில் யாரும் இல்லாதபோது நடந்தது. நல்லவேளையாக அப்போது பள்ளி வேனில் மாணவர்கள் யாருமே இல்லை. மாணவர்கள் இருக்கும்போது நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. அதேபோன்ற ஒரு சம்பவம்தான் குன்றத்தூர் அருகே கோவூரில் இன்று நடந்துள்ளது. குன்றத்தூர் பகுதியில் செயல்படும் பள்ளி ஒன்றின் சார்பில் மாணவர்களுக்காக வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேனில் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். அப்படித்தான் இன்று காலையும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. பள்ளி வேன், கோவூரில் வாகனங்களுக்குக் கேஸ் நிரப்பும் பங்க் எதிரே சென்றபோது, திடீரென புகை வந்தது. இதனால் சுதாரித்த பள்ளி வேன் ஓட்டுநர், உடனடியாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். அதன்படியே மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய அடுத்த நொடி வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கேஸ் பங்க் பணியாளர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, தீயை அணைக்கப் போராடினார்கள். அவர்களுக்குப் பொதுமக்களும் உதவினர். இதனால் தீ விரைவாக அணைக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு நிகழவிருந்த பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. பள்ளி வேன்கள் அடிக்கடி இதுபோன்று தீ விபத்தில் சிக்குவது மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது. எனவே, அரசு அதிகாரிகள் பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்து, இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.