நரம்பில் ஏறிய பாம்பு விஷம்.. 15 ஊசி போட்டும்.. தம்பியை 150 முறை அறைந்த அண்ணன்.. ஏன் தெரியுமா?

  • சென்னை: வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபரை விஷப்பாம்பு கடித்து விட்டது.. இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தீவிர மயக்க நிலைக்கும் சென்றுவிட்டார்.. பாம்பு கடித்த அந்த 21 வயது இளைஞரை, குடும்பத்தினரும், டாக்டர்களும் ஒருவழியாக காப்பாற்றி உள்ளனர். இதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன...!!

    Advertisement

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம், கிராமப்புற கோத்வாலி பகுதியை சேர்ந்தவர் அருண்.. 21 வயதாகிறது.. இவரது அண்ணன் ஆகாஷ்.. இந்த ஆகாஷூக்கு விவசாய சொந்தமாக உள்ளது..

    Advertisement

    வயலில் விஷப்பாம்பு

    இந்த விவசாய நிலத்திற்கு நேற்று மதியம், பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அருண் சென்றிருக்கிறார்.. மதியம் 2 மணியளவில், அருண் வயலில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரிலிருந்து ஒரு வைக்கோல் மூட்டையை கைகளால் தூக்க முயன்றார். அப்போது, அந்த மூட்டைக்க்குள்ளிருந்து, விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அருணின் கையை கொத்தி விட்டது.

    பாம்பு கடித்த வலியால் அருண் கதறினார்.. அதற்குள் அந்த விஷம், அருணின் ரத்தத்தில் கலந்து உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கத் தொடங்கியது. இதனால் அருணுக்கு மயக்கம் ஏற்பட்டு, கண்கள் தானாகவே சொருகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    Advertisement

    மெடிக்கல் ஷாப் நண்பர்

    இதைப்பார்த்து பதறிப்போன அண்ணன் ஆகாஷ், உடனடியாக அருணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது, வழியில் மெடிக்கல் ஸ்டோர், நடத்தி வரும் சிவம் சர்மா என்பவர், அருணின் நிலைமையை புரிந்து கொண்டு, உடனடியாக உதவ முன்வந்தார். அவர் தனது பைக்கில் அருணைப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் எமெர்ஜென்சி வார்டில் சேர்த்தார்.

    மருத்துவமனையில் அருணை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக அவசரச் சிகிச்சைகளைத் தொடங்கினர். ஆனால் பாம்பு விஷம், நரம்பு மண்டலத்தை அதிகமாகவே பாதித்திருந்ததால், அருண் சுயநினைவை இழந்து தீவிர கோமா நிலைக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்..

    Advertisement

    150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன்

    எனவே, சிகிச்சை தொடரும் வரை அருண் எந்த சூழ்நிலையிலும் தூங்கிவிடக் கூடாது என்றும், சுயநினைவு தப்பாமல் அவரைத் தொடர்ந்து விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு அலர்ட் தந்தனர்..

    டாக்டர்களின் இந்த வார்னிங்கையடுத்து, ஆகாஷ், தம்பியின் கட்டிலுக்கு அருகிலேயே நின்று கொண்டார். அருண் கண்கள் சொருகித் தூங்க தொடங்கும்போதெல்லாம், அருண், அருண் என்று ஆகாஷ் தம்பியின் பெயரை சொல்லி சத்தமாக அழைத்தார்.. பிறகு அருணின் கன்னத்தில் ஓங்கி அறைந்து எழுப்பிக் கொண்டே இருந்தார்.

    தம்பியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 150-க்கும் மேற்பட்ட முறை, தனது தம்பியின் கன்னத்தில் ஆகாஷ் அறைந்து, அருணை சுயநினைவோடு வைத்துள்ளார்.

    Advertisement

    உயிர் பிழைத்த அருண்

    அருணின் உடலில் பரவியிருந்த விஷத்தை முறிப்பதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவருக்கு அடுத்தடுத்து 15 விஷமுறிவு ஊசிகள் அதாவது Anti-Venom Injections செலுத்தினார்கள்.. அண்ணனின் அசைக்க முடியாத இந்த பாசப்போராட்டமும், டாக்டர்களின் துரிதமான சிகிச்சையும் சேர்ந்து, அருணை மெல்ல மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தன.

    மொத்தத்தில், பாம்பு கடித்தவுடன் பீதியடையாமல் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், வழியில் சிவம் சர்மா அளித்த உதவிகளும், டாக்டர்களின் அட்வைஸை அப்படியே பின்பற்றி நோயாளிக்கு சுயநினைவைத் தக்கவைத்ததும், அருணின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன..

    Advertisement

    இப்போது அருண் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டாராம்.. டாக்டர்களின் தீவிரக் கண்காணிப்பில் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறாராம். தம்பியின் உயிரைக் காக்க, 150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன் எடுத்த இந்த வினோதமான முயற்சிதான், சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது...!!

    English Summary

    Snake Venom Spread Through His Body.. Why Did His Brother Slap Him 150 Times After 15 Injections? Unbelievable