சாலமன் பாப்பையா கடைசி பட்டிமன்றம்.. விடாமல் சொல்லிய வார்த்தை.. நிறைவேறாமலே போன அந்த விருப்பம்

  • சென்னை: சாலமன் பாப்பையா என்ற பெயர் வந்தாலே, தமிழர்களின் நினைவில் முதலில் வந்து நிற்பது பட்டிமன்ற மேடைதான். ஆனால், அவரது கடைசி பட்டிமன்றக் காட்சியைப் பார்க்கும்போது, மனதில் எழுவது ஒரு கேள்வி மட்டுமே.. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த மனிதருக்குள் இருக்கும் அந்த இளமைத் துள்ளல் மட்டும் எப்படி குறையவே இல்லை? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் காட்சிகள் இப்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், அவரை ரசித்த தலைமுறைகள் மீண்டும் அவரையே திரும்பிப் பார்க்கின்றன.

    Advertisement

    சிலர் மேடைக்கு வந்தால் நிகழ்ச்சி நடக்கும். சிலர் மேடைக்கு வந்தால்தான் நிகழ்ச்சியே களைகட்டும்.. சாலமன் பாப்பையா அந்த 2வது வகையைச் சேர்ந்தவர். அவர் நடுவராக அமர்ந்துவிட்டால், பட்டிமன்றம் என்பது வெறும் பேச்சுப் போட்டியாக இருக்காது. சிரிப்பும் இருக்கும்.. சிந்தனையும் இருக்கும்.. வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய புரிதலும் கிடைக்கும்.

    Advertisement

    விநாயகர் சதுர்த்தியை சிறப்பு பட்டிமன்றம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்திலும் அதே காட்சி. வழக்கம்பேல் பாரதி பாஸ்கர், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிக்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார். "Gen Z தலைமுறையின் போக்கு என்ன?" என்பதுதான் தலைப்பு. சன் டிவியில் இதற்கான புரோமோவும் ஒளிபரப்பாகி வருகிறது.

    அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, வயது ஒரு மனிதனின் எண்ணங்களுக்கும் உற்சாகத்துக்கும் அளவுகோல் அல்ல என்பதை சாலமன் பாப்பையா மீண்டும் நினைவூட்டுகிறார். காலம் நகர்ந்திருக்கிறது.. தலைமுறைகள் மாறியிருக்கின்றன... ஆனால், மேடையில் அவர் காட்டிய துள்ளலும், பேச்சில் இருந்த தெளிவும், சிரிப்பில் இருந்த இயல்பும் இன்னும் அப்படியே இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்த்த அதே சாலமன் பாப்பையாவை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    Advertisement

    சாலமன் பாப்பையா

    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக பெரிய அளவிலான பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்தார். ஆனால், இந்த கடைசி நிகழ்ச்சிக்காக சிவகாசி சென்று வந்ததாக அவரது உதவியாளர் ராஜா தெரிவித்துள்ளார். அப்போது அவர் நன்றாகவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை ஒரு பட்டிமன்ற மேடைக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல.. தந்தை பெரியாருடன் பயணித்தவர். கலைஞர் கருணாநிதியுடன் பயணித்தவர். அவரது பட்டிமன்றத்தில் பேரறிஞர் அண்ணாவே அமர்ந்து கேட்டிருக்கிறார். சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் வாழ்ந்தவர்.

    நிறைவேறாத ஆசை

    மகாகவி பாரதியார் மறைந்த அதே நாளில் சாலமன் பாப்பையாவும் மறைந்திருப்பது காலத்தின் வினோதமான ஒற்றுமையாக அமைந்திருக்கிறது. பாரதியார் குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது அவரது ஆசை. அதை எழுதியும் முடித்தார். ஆனால், அது வெளியிடப்படும் நேரத்தில் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்துவிட்டது. அந்தப் புத்தகத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

    Advertisement

    கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், வாழ்நாள் முழுவதும் மனிதர்களை மதம், சாதி என்ற எல்லைகளுக்குள் பார்க்காதவர் சாலமன் பாப்பையா. அதனால்தான், தனது உடலை இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார்.

    சிரிப்பை விதைத்த மேடை

    பட்டிமன்றத்தை சிரிக்க வைக்கும் மேடையாக மட்டும் பார்க்காமல், சிந்திக்க வைக்கும் அறிவுத் தளமாக மாற்றியதில் சாலமன் பாப்பையாவின் இடம் தனித்துவமானது. அவர் பேசிய வார்த்தைகள் முடிந்துவிட்டாலும், அந்த வார்த்தைகளால் சிரித்த முகங்களும், சிந்தித்த மனங்களும் இருக்கின்றன.

    அதனால்தான், அவரது கடைசி பட்டிமன்றக் காட்சியைப் பார்க்கும்போது கண்களில் சோகம் மட்டும் வரவில்லை.. ஒரு காலத்தை வாழ வைத்த மனிதரை பார்த்த நிறைவும் வருகிறது... மேடை முடிந்துவிட்டது.. ஆனால், சாலமன் பாப்பையா விட்டுச் சென்ற அந்தச் சிரிப்பும், சிந்தனையும், தமிழோடு கலந்த அவரது குரலும் இன்னும் நம்முடைய வீடுகளில் நீண்ட காலம் ஒலித்துக்கொண்டே இருக்கும்...!!!

    English Summary

    Solomon Pappaiya's Last Pattimandram.. That Familiar Face, A Stage That Spreads Smiles.. An Unfulfilled Final Wish