சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோருக்கு சூப்பரான வசதி வரப்போகிறது.. நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர், வடபழனி முதல் பனகல் பார்க் வரையிலான வழித்தடப் பணிகளை 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் டார்கெட் நிர்ணயித்துள்ளது.. ஏற்கனவே கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த விரிவாக்கம் எந்தெந்த பகுதிகளுக்குப் பயனளிக்கும் தெரியுமா?
சென்னையில் டிராபிக்கில் சிக்காமல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாக செல்ல மெட்ரோ ரயில் சேவை நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது.. இதனால், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள வழித்தடங்களுடன் புதிய பகுதிகளையும் இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் சமீபத்தில் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருப்பது பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைதான்.. இந்த வழித்தடத்தை கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். மஞ்சள் வழித்தடம் என்று அழைக்கப்படும் இந்தப் பாதையில் மொத்தம் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 25,474 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.. அதாவது, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இத்தனை பேர் பயணம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன.. மொத்தம் 47 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 46 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம், ரெட்டேரி, கொளத்தூர், அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி, போரூர் வழியாக நந்தம்பாக்கம் வரையில் இந்தப் பாதை செல்கிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் மேம்பாலத்தின் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது மேம்பால பணிகளை தொடர்ந்து தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான வழித்தடத்தில் 70 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர் வரையிலும், வடபழனி முதல் பனகல் பார்க் வரையிலும் உள்ள வழித்தடப் பணிகளை 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த சில மாதங்களில் சென்னையின் மெட்ரோ இணைப்பு மேலும் விரிவடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தின் பச்சை மற்றும் நீல வழித்தடங்களுடன் இணைப்பு கிடைக்கும். இதனால் தியாகராய நகர் செல்வோர் மட்டுமல்லாமல், ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்வோருக்கும் பயணத்தை திட்டமிடுவது ஈஸியாக இருக்கும். குறிப்பாக, கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர், வடபழனி, நந்தம்பாக்கம் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் தினமும் வேலைக்காக இந்தப் பகுதிகளைக் கடந்து செல்பவர்களுக்கு மெட்ரோ சேவை, ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. அதுமட்டுமல்லாமல், டிராபிக்கை தவிர்த்து பயணம் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கும். இருந்தாலும், 2027 மார்ச் மாதம் என்பது பணிகளை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்குதான். கட்டுமானப் பணிகள் முடிந்து, சோதனைகள் மற்றும் தேவையான அனுமதிகள் கிடைத்த பிறகே ரயில் சேவை தொடங்கும் தேதியை உறுதியாக தெரிந்துகொள்ள முடியும்...!!வடபழனி மெட்ரோ அதிரடி
மாதவரம் - சோழிங்கநல்லூர் ரூட்
2027 மார்ச் டார்கெட்டா
சென்னை டிராபிக்குக்கு குட்பை