எடப்பாடி கூட்டத்திற்கு ஆப்சென்ட்.. ஈரோட்டில் அதிமுக நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்பி வேலுமணி!

  • சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த எஸ்பி வேலுமணி, ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

    Advertisement

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 84 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுதோல்வி காரணமாக கட்சிக்குள் மோதல்களும் கிளம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியும் விவாதித்துள்ளார்.

    Advertisement

    இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்ததால் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேசமயம், துணைப் பொதுச் செயலாளர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

    Advertisement

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈரோட்டில் கட்சி நிர்வாகி ஒருவரது அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    A consultative meeting of AIADMK district secretaries was held today under the leadership of Edappadi Palaniswami. Senior party leaders Natham Viswanathan and SP Velumani did not participate in the meeting; instead, SP Velumani attended an event in Erode.