சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி தவெக பக்கம் செல்லவும், தங்கமணி பாஜக பக்கம் செல்லவும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் தவெகவில் இணைந்த பின் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக எஸ்பி வேலுமணி பாஜக மேலிடத்திலும் அனுமதி கேட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். அப்போதே தவெக உடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் காய் நகர்த்தியதாக சொல்லப்பட்டது.
ஆனால் அமைச்சரவை அமைக்கப்பட்ட பின் அதிமுக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அமைதியாகினர். இதனிடையே 6 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் நகர்ந்தனர். இந்த டிரெண்ட் அதிமுக எம்எல்ஏ-க்கள் மத்தியில் ஒரு அலையை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனிடையே எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி இருவருமே முதலில் திமுக உடன் பேசியதாக சொல்லப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி எதிர்ப்பு மற்றும் அவர்களுக்கு இருக்கும் பாஜக உடனான நெருக்கம் காரணமாக திமுக வாய்ப்பு இல்லை என்று கையை விரித்துவிட்டது. இதனால் தவெக பக்கம் செல்லலாம் என்ற முடிவில் இருவரும் இருந்தனர். ஆனால் தங்கமணியின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 3 அமைச்சர்கள் இருக்கின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வேகமாக வளர்ந்து வருகிறார். இதனால் தவெகவில் இணைந்தாலும் எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு தங்கமணி வந்துவிட்டார். இதனால் பாஜக பக்கம் நகர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் எஸ்பி வேலுமணி பாஜக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் தவெகவில் இணைந்தால், எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் எஸ்பி வேலுமணி தெளிவாக இருக்கிறார். இதனால் தவெகவில் இணையும் முடிவுக்கு வந்தாலும், பாஜக மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே எஸ்பி வேலுமணியின் வருகையை அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் சம்பத் குமார் இருவருமே ரசிக்கவில்லை. கோவையில் எஸ்பி வேலுமணிக்கு இருக்கும் சமூக ரீதியிலான செல்வாக்கு மற்றும் அதிமுகவின் கட்டமைப்பு காரணமாக, தங்களை ஓரங்கட்டிவிடுவார் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் எஸ்பி வேலுமணி வந்தால், தவெகவில் மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது.