சோலி முடிஞ்சு.. இரட்டை இலையில் உதிரும் ஒற்றை இலை! தவெகவுக்கு தாவும் வேலுமணி? எடப்பாடிக்கு சிக்கல்!

  • சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவில் தொடர்ந்து நிலவி வரும் உட்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விலகி வரும் சூழலில், எஸ்.பி. வேலுமணியும் கட்சியை விட்டு வெளியேறப் போகிறாரா? என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், அது எந்த கட்சி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    கட்சி பிளவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கினார். ஆனால் அந்தப் பதவியை ஏற்க அவர் விருப்பம் காட்டவில்லை.

    Advertisement

    தனக்கு மட்டுமே பதவி வழங்கி, தன்னை நம்பி வந்த நிர்வாகிகளை புறக்கணித்திருப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல், 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பிறகு அதிமுகவில் அதிருப்தி அதிகரித்துள்ளது.

    எஸ்.பி. வேலுமணி

    இதன் தொடர்ச்சியாக பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவதால், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலமும் குறைந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக கோவை தொண்டாமுத்தூரில் தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனைக் கூட்டங்களில் அவர் பேசிய கருத்துகள், அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    திமுக

    இதற்கிடையில், சென்னை செல்லுவதற்காக கோவையில் இருந்து புறப்பட்ட எஸ்.பி. வேலுமணியை செய்தியாளர்கள் சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். "நான் சென்னைக்கு புதிதாகவா போகிறேன்? எதற்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை," என்று சிரித்தபடியே அவர் பதிலளித்தார்.
    அப்போது, "திமுகவுக்கு செல்கிறீர்களா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறீர்களா? சபாநாயகரை சந்திக்கப் போகிறீர்களா?" என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு, "நீங்கள்தான் பரபரப்பு என்று சொல்கிறீர்கள். எந்தப் பரபரப்பும் இல்லை. நான் வாரத்தில் இரண்டு நாள் சென்னைக்கு செல்வது வழக்கம். இன்றும் அதற்காகத்தான் செல்கிறேன்," என்றார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகமா?

    மேலும், "திமுகவா? தமிழக வெற்றிக் கழகமா?" என்ற கேள்விக்கு, "நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா? நாங்கள் அதிமுகவில் இருக்கக் கூடாது என்று ஊடகங்கள் நினைக்கிறதா?" என்று சிரித்தபடியே பதிலளித்தார். இறுதியாக, "எதுவாக இருந்தாலும் உங்களிடமே முதலில் சொல்வேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
    எஸ்.பி. வேலுமணியின் இந்த பதில் எதையும் உறுதி செய்யாத நிலையில், யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அவர் அதிமுகவிலேயே தொடர்வாரா? அல்லது தவெகவில் சேரும் முடிவை எடுக்கிறாரா என்பது குறித்து அவரது ஆதரவாளர்களே குழப்பமடைந்துள்ளனர்.

    மாவட்டச் செயலாளர்கள்

    இதற்கு முன்பாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, கட்சித் தலைமையின் முடிவு குறித்து வெளிப்படையாகவே அதிருப்தியை பதிவு செய்திருந்தார். "எனக்கு மட்டும் பதவி கொடுத்தால் நான் எப்படி ஏற்றுக்கொள்வது? என்னை நம்பி வந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலருக்கும் இன்னும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவி வாங்கத் தயாராக இல்லை," என்று அவர் கூறியிருந்தார்.

    Advertisement

    பதவி

    மேலும், "என்னை நம்பி பின்னால் நிற்கும் பல முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் கட்சியை கட்டியெழுப்பிய தலைவர்களுக்கே பதவி இல்லை. அப்படியிருக்கும்போது எனக்கு மட்டும் பதவி வழங்கப்படுவதை ஏற்க முடியாது," என்றும் அவர் ஆதரவாளர்களிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எம்.ஆர். விஜயபாஸ்கர்

    இந்த நிலையில், நேற்று கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பாகவே விராலிமலை தொகுதியைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால், அதிமுகவில் இருந்து இன்னும் சில முக்கிய தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விலகக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. அந்த பட்டியலில் எஸ்.பி. வேலுமணியின் பெயரும் அடிபடுகிறது.

    Advertisement

    அதிமுக தலைமை

    ஆனால், இதுவரை அவர் கட்சியை விட்டு விலகுவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அதிருப்தி கருத்துகள், ஆதரவாளர்களுடன் நடத்தி வரும் ஆலோசனைகள், அதிமுக தலைமையை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளன. கொங்கு மண்டலத்தில் உலாவி வரும் தகவல்களின் படி அவர் தவெகவில் சேரும் வாய்ப்பே அதிகம் என்கின்றனர்.

    English Summary

    Speculation over SP Velumani’s political future intensifies as AIADMK faces resignations and internal unrest.