“தீர்மானம் பற்றி மட்டும் பேசுங்க” உதயநிதி ஸ்டாலின் பேசியபோது குறுக்கிட்டு அட்வைஸ் செய்த சபாநாயகர்!

  • சென்னை: மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டதை மட்டும் பேசுங்கள்" என உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கினார்.

    Advertisement

    தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பூமணி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தபிறகு கூட்டத்தொடர் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

    மேலும் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது. தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்படுகிறது" என்றார்.

    Advertisement

    மேலும் பேசிய உதயநிதி, "ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது எழுந்து கடிதம் எழுதிவிட்டு தூங்கப் போய்விடுவார்.. பிரச்சனை அப்படியே இருக்கும் மானே தேனே பொன்மானே போட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவார் என்று இப்போது முதல்வராக இருக்கக்கூடிய விஜய் அப்போது கட்சி தலைவராக இருந்தபோது கிண்டல் செய்து பேசுவார் இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    "மாநில நலன் என்று வந்தால் கர்நாடகாவில் எப்படி அரசியல் வேறுபாடு பார்க்காமல் ஓரணியில் நிற்கிறார்களோ அப்படி நம் ஒற்றுமையை கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் காட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை வைத்தோம். விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசு இதை தானாகவே செய்திருக்க வேண்டும்" என உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்டார் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர்.

    Advertisement

    "சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டதை மட்டும் பேசுங்கள். பிரச்சனையின் தீவிரத்தை கருதி பேசுவதற்கு அனுமதி அளித்துள்ளோம்.
    சுருக்கமாக பேசி அரசின் கவனத்தை ஈர்த்து அமருங்கள்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

    English Summary

    Leader of the Opposition Udhayanidhi Stalin raised a question to the Chief Minister while speaking on a special calling-attention motion regarding the Mekedatu dam. Interrupting him, Speaker JCD Prabhakar advised Udhayanidhi Stalin to speak only on the matters specified in the special calling-attention motion.