எந்த பக்கமும் சாயாத சபாநாயகர்! ஆதாரம் இல்லாம பேசாதீங்க! JCD பிரபாகர் மீது ஏக கோபத்தில் தவெக தலைகள்

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களின் போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் அணுகுமுறை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் பேச்சுகளை கண்டித்தும், எதிர்க்கட்சிகளுக்கு போதிய வாய்ப்பு வழங்கியும் அவர் நடுநிலையுடன் செயல்பட்டதாக எதிர்க் கட்சிகளே பேசி வரும் நிலையில், சபாநாயகர் மீது தவெக நிர்வாகிகளே அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

    Advertisement

    வழக்கமாக பரபரப்பாக மாறும் சூழ்நிலைகளில் சபாநாயகர் தலையிட்டு விவாதத்தை ஒழுங்குபடுத்துவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற அவை நிகழ்வுகளில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    ஜேசிடி பிரபாகர்

    குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தபோது, "ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. எந்த ஊர், எந்த காவல் நிலையம், எந்த வழக்கு என்பதை குறிப்பிட்டு பேசுங்கள்" என்று சபாநாயகர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் அவை மட்டுமல்லாது அதனை நேரலையில் பார்த்தவர்களையும் கவனிக்க வைத்தது. சபாநாயகரின் குறுக்கீட்டுக்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "நாளை ஆதாரங்களுடன் வருகிறேன்" என்று கூறினார். இதன் மூலம் அமைச்சராகவே இருந்தாலும் ஆதாரத்தோடு பேச வேண்டுமென்ற சூழல் உருவாகியுள்ளது.

    Advertisement

    மேயர் பிரியா

    இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி இடையே அரசு நிகழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையையும் சபாநாயகர் அவையில் குறிப்பிட்டார். ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

    வன்னி அரசு

    அதேபோல் மத்திய அரசுக்கு எதிராக அமைச்சர் வன்னி அரசு முன்வைத்த கருத்துகளின் போதும் சபாநாயகர் சில கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால், அவர் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கூட சலுகை அளிக்காமல் நடுநிலையாக செயல்பட முயற்சிக்கிறார் என்ற கருத்து எதிர்க்கட்சிகளிடம் உருவாகியுள்ளது. சட்டப்பேரவை வளாகத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படும் தகவலின்படி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது செயல்பாடு குறித்து முதல்வர் விஜயுடன் ஏற்கனவே ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    க. ராஜாராம்

    முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த க. ராஜாராம் போல நடுநிலையான அணுகுமுறையை கடைபிடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த க. ராஜாராம், எதிர்க்கட்சிகளுக்கும் போதிய வாய்ப்பு வழங்கியவர் என்ற பெயரை பெற்றவர். அதேபோன்ற நடைமுறையை தற்போதைய அவையிலும் பின்பற்ற வேண்டும் என்பது ஜேசிடி பிரபாகரின் விருப்பமாக இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

    எதிர்க்கட்சிகள்

    எனினும் இந்த அணுகுமுறை ஆளுங்கட்சியின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்ற அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சட்டப்பேரவையில் அரசின் நிலைப்பாட்டை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழலில், அமைச்சர்களின் பேச்சுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    நடுநிலை அணுகுமுறை

    இதனால் அமைச்சர்கள் சிலர் சபாநாயகர் செயல்பாடு குறித்து தங்கள் அதிருப்தியை கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் செயல்பாட்டை வரவேற்று வருகின்றன. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அவையை நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது என்ற கருத்தை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் நடுநிலை அணுகுமுறை தொடருமா? அல்லது ஆளுங்கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படும் அதிருப்தி பெரிய பிரச்சினையாக மாறுமா? என்ற கேள்வி தவெக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    JCD Prabhakar’s strict and neutral handling of Assembly debates sparks discussion and discomfort within ruling TVK circles.