நேற்று சைகைக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்.. இன்று 'பினிஷிங்' சைகை காட்டிய விஜய்!

  • சென்னை: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சைகைகள் மூலம் மற்றவர்களை கேலி செய்வது அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் பாதிக்கும் செயல் என நேற்று கடுமையாக எச்சரித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், இன்று அதே சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் 'பினிஷிங்' சைகை காட்ட அனுமதி வழங்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நேரலையாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் ஒழுக்கம் குறித்து நேற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்போது, அவையில் சில உறுப்பினர்கள் மற்றவர்களை கேலி செய்யும் வகையில் சைகைகள் காட்டியதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சட்டப்பேரவையின் கண்ணியத்தை பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    உரிமை மீறல்

    இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால், அது பேரவை உரிமை மீறலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில்தான் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.

    தனது உரையின் இறுதிக்கட்டத்தில், எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளை முன்வைத்த அவர், பின்னர் சபாநாயகரை நோக்கி அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரங்களில் பயன்படுத்திய 'பினிஷிங்' சைகையை முதல்வர் விஜய் செய்து காட்டினார். இதையடுத்து அவையில் சிரிப்பலை எழுந்ததோடு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.

    Advertisement

    பினிஷிங் சைகை

    இந்த 'பினிஷிங்' சைகை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் போது இந்த சைகையை பயன்படுத்தியிருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் அந்த சைகை பல்வேறு அரசியல் மேடைகளில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது.

    மேலும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு, தனது வெற்றியை கொண்டாடும் வகையில் அதே சைகையை செய்திருந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில், நேற்று சைகைகள் குறித்து பேரவையிலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்வர் விஜய் அதேபோன்ற அரசியல் குறியீட்டு சைகையை சபாநாயகர் அனுமதியுடன் செய்து காட்டியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Advertisement

    விவாதமாக மாறிய சைகை

    கேலி செய்யும் சைகைகளுக்கு தடை என்றால், அரசியல் செய்தியை வெளிப்படுத்தும் சைகைகளுக்கு அனுமதியா. நேற்று கூறப்பட்ட விதிமுறைகள் இன்று பொருந்தவில்லையா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதமாகி வருகின்றன. அதே நேரத்தில், முதல்வர் விஜய் சபாநாயகரிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகே அந்த சைகையை செய்ததாக ஆளுங்கட்சி தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    English Summary

    A day after warning MLAs against making gestures in the Assembly, Speaker JCD Prabhakar permitted CM Vijay to recreate Stalin’s famous ‘finishing’ gesture, triggering fresh political debate.