சபாநாயகர் போட்ட மாஸ்டர் பிளான்.. ஜூலை 30-ல் இபிஎஸ்ஸூக்கு காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்?

  • சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவின் 6 எம்எல்ஏ-க்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சபாநாயகரின் அடுத்தகட்ட நடவடிக்கை உற்றுநோக்கப்படுகிறது. வரும் ஜூலை 30ம் தேதி சபாநாயகர் எடுக்கவுள்ள முக்கிய முடிவு, அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு, அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் பூசல்கள் இப்போது தீவிரமடைந்து வருவதாகவே தெரிகிறது.. தொடர்ந்து 2 தேர்தல்களில் அடைந்த தோல்விகள், கட்சித் தலைமை மீதான மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை அதிகரிக்க செய்து விட்டன..

    Advertisement

    இறுதியில் அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

    பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைந்த இந்த 6 உறுப்பினர்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் அதிமுக தலைமை மிக உறுதியாக உள்ளது.

    6 உறுப்பினர்கள் ராஜினாமா

    இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பேரவைத் தலைவரிடம் தொடர்ச்சியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டு பதவி விலகிய உறுப்பினர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    ஏற்கனவே அளிக்கப்பட்ட 3 புகார் மனுக்களின் அடிப்படையில் 3 கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது 4ம் கட்ட விசாரணைக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, வருகின்ற ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ள 4ம் கட்ட விசாரணையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் ஆஜராகுமாறு பேரவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    கட்சித் தாவல் சட்டம்

    முந்தைய விசாரணைகளின்போது, "நாங்கள் எந்தவிதமான கட்டாயமும் இல்லாமல், சுயவிருப்பத்தின் பேரில் தான் ராஜினாமா செய்தோம்" என முன்னாள் உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களின் இந்த விளக்கத்திற்கு அதிமுக தரப்பு என்ன பதில் சொல்லப் போகிறது? என்பதை அறியவே 2 தரப்பையும் ஒரே நேரத்தில் அழைக்க பேரவைத் தலைவர் முடிவெடுத்துள்ளார்.

    Advertisement

    அதேசமயம் பதவி விலகிய உறுப்பினர்கள் அளித்த கடிதங்களின் நகல்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அதைப் பரிசீலித்த பிறகே உரிய பதிலளிக்க முடியும் என்றும் அதிமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    சபாநாயகர் முடிவு என்ன

    ஜூலை 30 அன்று தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த 4ம் கட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்பாரா அல்லது அவருக்குப் பதிலாகக் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் ஆஜராவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, 6 உறுப்பினர்களும் தங்களின் சுய விருப்பத்தின் பேரில்தான் பதவி விலகினர் என்பது முறைப்படி உறுதிசெய்யப்பட்டால், அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக ஏற்கக்கூடும்.

    Advertisement

    அதிமுக உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வராததன் காரணமாகவே, காலியான தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ள விசாரணை முடிவு, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Speaker's Master Plan? Big Twist Waiting for EPS on July 30 in AIADMK MLA Resignation Row